மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 8

ஆற்காட்டாரும், ஆங்கிலேயர்களும்

Maruthu Pandiyar Kalayarkoil Temple ஆங்கிலேயர்கள், வியாபாரம் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் கி.பி. 1600ஆம் ஆண்டு. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற ஓர் அமைப்பை இங்கிலாந்திலே உருவாக்கியதால் அதன் சென்னைப் பிரிவு தன் வசமிருந்த வெடி மருந்து ஆயுத வசதிகளைக் கொண்டு இந்திய சுதேச மன்னர்களை அச்சுறுத்தி இந்தியாவில் நாடுபிடிக்கும் செயலை மெல்ல மெல்ல நடத்தி வந்தது. சுதேச சமஸ்தான மன்னர்களிடமிருந்து கடன் வசூலிக்கும் காரியங்களில் ஆங்கிலேயர் அடாவடியாகச் செயல்பட்டு வந்தனர். அச்செயலுக்கான விலையாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் அவர்கள் கூலியாகப் பெற்று வந்தனர். இந்நிலையில் சிவகங்கையின் பாதுகாப்பிற்கும், நிர்வாகச் செலவிற்காகவும், சிவகங்கை அரசர் முத்துவடுகநாதர் புதுக்கோட்டை அரசரிடமும், ஆற்காடு நவாப் முகமதலியிடமும் ஒரு குறிப்பிட்ட தொகையினைக் கடனாகப் பெற்றிருந்தார். அதைத் திருப்பிச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. சிவகங்கை அரசரிடமிருந்து கடனை வசூலிக்க ஆற்காடு நவாப் முகமதலி ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார்.

1759ஆம் ஆண்டு மே மாதம் ஆங்கிலக் கிழக்கிந்தியர் கம்பெனியின் சென்னைப் பிரிவு முகமது யூசுப்கான் என்ற கான்சாகிவை (மருதநாயகம்) நவாபின் பிரதிநிதியாக மதுரை கவர்னராக நியமித்தது. கான்சாகிப் முத்துவடுகநாதரிடமிருந்து கடனைத் திரும்பப் பெறுவதற்காகச் சிவகங்கைப் பாளையத்தின் மீது படையெடுக்கப் போவதாக சிவகங்கையிலிருந்து அரசர் முத்துவடுகநாருக்கு ஓர் ஓலை அனுப்பினார். சிவகங்கைப் பாளையக்காரர் முத்துவடுகநாதத் தேவர் ஓராண்டுக்குள் கப்பம் முழுவதையும் செலுத்தாவிடில் அவருக்குச் சொந்தமான திருப்புவனததைக் கைப்பற்றுவேன் என்று அதில் எச்சரிக்கை செய்திருந்தார். அப்போது சிவகங்கை பாளையத்தின் பிரதானியாக (முதன் மந்திரி) தளவாய் (தளபதி) தாண்டவராய பிள்ளை அவர்கள் சிவகங்கையில் சேவகம் செய்து கொண்டு இருந்தார். இவர் சிவகங்கையின் முதல் மன்னர் சசிவர்ணத்தேவரிடமும், பின்பு அவர் மகன் முத்துவடுகநாரிடமும், பின் வேலுநாச்சியார் இடமும் மந்திரியாக பணி செய்தவர். மாவீரன் மருதுபாண்டியர்களை இந்த மண்ணுலகுக்கு இனம்காட்டிவிட்டுச் சென்ற மகா மதிநுட்பமான பெரியவர்.

omathurai sivathaiya images சிவகங்கை அரசரின் சார்பில் மதுரையை ஆண்டுகொண்டு இருந்த சாமாந்தன் கான்சாகிப்பின் மனைவி மாஷா என்பவரை சந்தித்தார். அரசரின் பெயரில் மாஷாவுக்குத் தாண்டவராய பிள்ளை ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினார். பின்னர் அந்த அம்மையாரிடமிருந்து கான்சாகிப் சிவகங்கை தலைவர் மீது படையெடுத்து வரக்கூடாது என்ற உறுதிமொழியையும் பெற பிள்ளையவர் அவரைச் சந்தித்தார். மாஷா அம்மையார் கொடுத்த நம்பிக்கை உறுதிமொழியின் அடிப்படையில் பிரதானி தாண்டவராய பிள்ளை கான்சாகிப்பை மதுரை சபையில் சந்தித்தார். ஆனால் கான்சாகிப் தனது மனைவி மாஷாவின் உறுதிமொழியை அலட்சியம் செய்து, பிள்ளை அவர்களை அவமரியாதை செய்து அனுப்பி வைத்தார். மனமுடைந்த தாண்டவாராய பிள்ளை சிவகங்கை திரும்பி வந்து அரசர் முத்துவடுகநாதரிடம் நடந்த சம்பவங்களை விரிவாக விளக்கினார். உடனே அரசின் தலைநகரை சிவகங்கையில் இருந்து அடர்ந்த காடுகளுக்கு நடுவேயுள்ள காளையார்கோயிலுக்கு தாண்டவராய பிள்ளை மாற்றினார். அரசர் முத்துவடுகநார் காளையார் கோயிலில் பாதுகாப்பாக வசிப்பதற்கு வேண்டி மருதுபாண்டியர் இருவரையும் அனுப்பி பல முன்னேற்பாடுகளைச் செய்தார்.

மன்னர் முத்துவடுகநாதருக்கு தாண்டவராய பிள்ளை மருதுபாண்டியர்கள் இரு கண்களாக விளங்கினார்கள். முத்துவடுகநாதரின் மனைவி வீரநங்கை வேலுநாச்சியார் தம் கணவருக்கு மிகச் சிறந்த ஆலோசகராக விளங்கி வந்தார். ஆற்காடு நவாபு மற்றும் ஆங்கிலேயரின் ஆதிக்க வெறி கண்டு சிவகங்கை வீரர்கள் துடித்தனர். ஆற்காடு நவாபு, முகமது அலி தனக்கு சிவகங்கை அரசர் முத்துவடுகநாதர் கப்பம் கட்ட வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தார். இந்நிலையில் நவாப்பின் பட்டாளன்கள் சிவகங்கை மீது போர் தொடுப்பதற்கு தீரவீர ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தன. அரசர் முத்துவடுகநாதர் தனது படைவீரர்களின் துணையுடன் பெரிய மரங்களை வெட்டி போட்டும், பதுங்கு குழிகளை அமைத்தும் காளையார்கோயிலின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். நவாபின் மைந்தர் உம்தத்-உல் உமாரா ஒரு லட்சம் பணம் கப்பமாக செலுத்துமாறு முத்துவடுகநாதரைக் கேட்டார். அரசர் முத்துவடுகநாதர் கப்பம் செலுத்த மறுத்துவிட்டார். அவர் தனது இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் காளையார் கோயிலில் ஆலயத்தினுள் தங்கியிருந்தார். தாண்டவராய பிள்ளையும் முதல் மனைவியுமான வேலுநாச்சியாரும் காளையார் கோயிலுக்கருகிலுள்ள கொல்லங்குடி என்னுமிடத்தில் தங்கியிருந்தனர்.

காளையார்கோயில் போர்

நவாபின் வேண்டுகோளுக்கிணங்க, கம்பெனிப் படைகள் அடர்ந்த காடுகளை அழித்து காளையார்கோயில் மீது படையெடுப்பதற்கு ஆயத்தங்கள் செய்தன. இந்த நிலையில் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதராயத் தொண்டைமான் 5000 மரம் வெட்டும் கூலிப்படைகளையும் 300 குதிரைகளையும் 5000 காலாட் படைகளையும் கம்பெனிப் படைக்கு வழங்கி உதவி செய்தார். யாரை அழிக்க? சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை அழிக்க. 1772ஆம் ஆண்டு ஜூன் 22ல் தளபதி ஸ்மித், தளபதி பான்ஜோர் தலைமையில் படையெடுத்து வந்த கம்பெனிப் படைகள் சிவகங்கைக்கு அருகில் உள்ள கீரனூர் சோழபுரம் கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டன. புதுக்கோட்டை மன்னர் அனுப்பிய கூலிப்படைகள் காளையார் கோயில் காடுகளை கடந்து காளையார் கோயிலுக்கருகிலுள்ள கோட்டை மேடு என்னுமிடத்திற்கருகில் அணிவகுத்து நின்றன. 1772ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ந் தேதி (25-6-1772) சிகங்கை அரசர் முத்துவடுகநாதர், நட்ட நடுநிசியில் தனியாகக் கூட்டமாய் வந்த கம்பெனிப் படையில் தனியாக மாட்டிக் கொண்டார். காளையார் கோயில் போரில், முத்துவடுகநாதரும், அவரது படைவீரர்களும் எதிரிப்படைகளை எதிர்த்துத் தாக்குதல் தொடங்கினர். மருது சகோதரர்கள் எதிரிப்படையினர் உட்புகுந்து வாளாலும், வளரியாலும் பகைவர்களை சின்னாபின்னமாக்கினர். இந்நிலையில் நவாபின் படைகளும், புதுக்கோட்டைத் தொண்டைமானின் கூலிப்படைகளும், ஆயுதங்கள் நிறைந்த ஆங்கிலக் கம்பெனியின் படைகளும் ஒன்று சேர்ந்து உக்கிரமாகத் தாக்கிய பொழுது கோட்டையின் மதிற்சுவர்கள் இடிந்து வீழ்ந்தன. கோட்டை வாயிலைப் பகைவர் படைவீரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இறுதியில் முத்துவடுகநாதரும், அவரது இளைய மனைவி கௌரிநாச்சியாரும் ஏராளமான படைவீரர்களும் அன்னிய ஆதிக்க வெறி பிடித்த கம்பெனிப் படை வீசிய பீரங்கிக் குண்டுகளால் வீர மரணமடைந்து விண்ணுலகெய்தினர். காளையார் கோயில் சூறையாடப்பட்டது. அக்கொள்ளையின் மூலம் கம்பெனிப் படைகளுக்கு 50,000 பக்கோடாக்கள் பெறுமான நகைகள் கிடைத்தன. சிவகங்கை சீமை முழுவதும் ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டது. அன்று முதல் சிவகங்கையின் பெயரை உசைன் நகர் என்று இஸ்லாமிய பெயராக மாற்றினர். இதே போல் இராமநாதபுரத்தை அலி நகர் என்று மாற்றினார். குடிமக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்குத் தரப்பட்டது.

திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையம்

சிவகங்கை அரசர் முத்துவடுகநாதர் இறந்த செய்தி கேட்டு தாண்டவராய பிள்ளை மெய் கலங்கிப் போனார். மன்னர் முத்துவடுகநாதர் போரில் இறந்த செய்தியை மருது சகோதரர்கள் கொல்லங்குடியில் தங்கியிருந்த ராணி வேலுநாச்சியாரிடம் சென்று தெரிவித்தனர். தனது கணவர் இறந்த பிறகு ராணி வேலுநாச்சியார் உடன் கட்டையேறி தனது உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றார். பிரதானி தாண்டவராய பிள்ளை மற்றும் பெரிய மருது, சின்ன மருது முதலியோர் வேலுநாச்சியாரை சமாதானம் செய்து இழந்த சீமையை எவ்வகையிலும் எங்கள் உயிரைக் கொடுத்தாவது மீட்டுத் தருவதாக அவருக்கு வாக்குறுதி வழங்கினர். தாண்டவராய பிள்ளையின் ஆலோசனைப்படி மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆளுகைக்குட்பட்ட திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாச்சி கோட்டையில் ராணி வேலுநாச்சியார் தங்குவது என முடிவெடுக்கப்பட்டது. மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரையும் அவரது மகள் வெ ள்ளாச்சி நாச்சியாரையும் பல்லக்கில் மேலூர் வழியாக திண்டுக்கல் அழைத்துச் சென்று அங்கிருந்து பின்னர் விருப்பாச்சி பாளையத்துக்கு போய் சேர்ந்தனர்.

விருப்பாச்சி என்ற சிற்றூர் திண்டுக்கல் கோட்டைக்கு வடகிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. வீரமும், மான உணர்வும் கொண்ட கம்பளத்து நாயக்கர்களைக் குடிமக்களாகக் கொண்ட புரட்சி பூமிதான் விருப்பாச்சிபாளையம. திண்டுக்கல் சீமையின் மிக முக்கியமான இருபது பாளையங்களில் ஒன்றாகும் இவ்வூர். இக்குடிமக்கள் வாழும் விருப்பாச்சிப் பாளையத்தை அவர்களது தலைவரான கோபால நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஒரு சிறந்த விடுதலை வீரர். விடுதலை இயக்கத்தின் மாபெரும் ராஜதந்திரி என்றும் அவர் அன்னாளில் கருதப்பட்டார். ஆங்கிலக் கம்பெனி படைகளை எதிர்த்துப் பல்வேறு போர்களில் கோபால நாயக்கர் பங்கு கொண்டார். மன்னர் முத்துவடுகநாதர் காளையார் கோயில் போரில் வீரமரணமடைந்ததைக் கேள்விப்பட்ட கோபால நாயக்கர், ராணி வேலு நாச்சியார், அவரது மகள் வெ ள்ளாச்சி நாச்சியார் மீது பரிவும், பாசமும் கொண்டிருந்தார். மந்திரி தாண்டவராய பிள்ளையின் நெருங்கிய நண்பரான அவர், வேலுநாச்சியார், அவர் மகள், மருது சகோதரர்கள், பிரதானி தாண்டவராய பிள்ளை ஆகிய அனைவரும் தங்குவதற்குத் தக்க வசதிகளையும் தகுந்த பாதுகாப்பும் செய்து கொடுத்தார். இந்த காலக்கட்டத்தில் வேலுநாச்சியாருக்கு ஆதரவாகச் சிவகங்கை சீமையிலுள்ள பல்வேறு சீமைகளுக்குச் சென்று அங்கு நடந்த விபரங்களைப் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி பொதுமக்களை நவாப்பிற்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு கேட்டு ஒன்று திரட்டினர். பின்னர் அவர்கள் விருப்பாச்சிப் பாளையத்துக்கு வந்து சேர்ந்தனர். விருப்பாச்சியில் வேலுநாச்சியார் தங்கியிருந்த பொழுது திண்டுக்கல் கோட்டைத் தளபதியாக ஹைதர் அலியின் மைத்துனர் சையத் சாகிப் என்பவர் பொறுப்பு வகித்தார். ராணி வேலுநாச்சியாரையும், தாண்டவராய பிள்ளையையும், மருது சகோதரர்களையும், கோபால நாயக்கர் சையத் சாகிப்பிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் மறவர் சீமைகளிலிருந்து ஆற்காடு நவாபை விரட்டி அடிக்க ராணியும் பிரதானியும், மருது சகோதரர்களும் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் உதவி கேட்டு வந்திருப்பதாக கோபால நாயக்கர் அவர்களிடம் சொன்னார். அக்கோரிக்கையை ஏற்று மைசூர் சுல்தான் ஹைதர் அலிக்குப் பரிந்துரை செய்து அனுப்பி வைக்குமாறு கோபால நாயக்கருக்கு உறுதி செய்துகொடுத்தார். எப்டியும் ராணிக்கு உதவி செய்ய வேண்டுமென்று மனதார சையத் சாகிப் விரும்பினார். சிகங்கைப் பிரதானி தாண்டவராய பிள்ளை ராணி வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலி அவர்களுக்கு 8-12-1772 தேதியிட்டு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆற்காடு நவாப் இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு தன்னரசுகளையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்தி வருகிறார். நான் கள்ளர் தலைவர்களுடன் காடுகளில் தங்கி கிளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறேன். எனக்கு யார் உதவி செய்தாலும் இன்னும் சிறந்த சாதனைகளை செய்ய முடியும். ஆகையால் தாங்கள் ஐயாயிரம் குதிரை வீரர்களையும் ...