சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயில் கட்டப்பட்டதற்கு ஒரு வரலாறு உள்ளது. சிவகங்கைப் பாளையத்தின் இரண்டாம் அரசர் முத்துவடுகநாதர் பட்டத்தரசி வேலுநாச்சியாருக்கு நெடுநாள்களாக மகப்பேறு இல்லாதிருந்தது. அரசரின் கடைசி நாளில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிள்ளைப் பேறுண்டானால் கோயில் ஒன்று கட்டுவதாக முத்துவடுகநாதர் இறைவனை வேண்டியிருந்தார். ஆனால் எதிர்பாராமல் 25-6-1772 அன்று நடந்த போரில் அவர் இறந்துவிடவே கோயில் கட்ட இயலாமல் போய்விட்டது. அரசரின் அவ்வேண்டுதலை அறிந்த மருது சகோதரர்கள் அக்கோயிலைக் கட்டி முடித்ததாகச் சொல்லப்படுகிறது. அக்கோயிலின் முன்மண்டபத்தில் இடப்புறம் உள்ள முதல் தூணில் இச்செய்தியை உறுதிப்படுத்துவதற்குரிய கல்வெட்டு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
திருமோகூர் என்ற வளர் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் ஒத்தக்கடை என்ற ஊரில் இருந்து பிரிந்து செல்லவும் ரோட்டில் 3 கல் தொலைவில் உள்ளது. அங்கு காளமேகப் பெருமானுக்கு இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அக்கோயிலின் முகப்பு முன் உள்ள மண்டபம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அக்கோயில் முன்பு மருது சகோதரர்களின் சிலைகள் இருக்கின்றன. மருது சிலைகள் மிகவும் உயரமாகவும், கம்பீரமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகுடன் உள்ளது. ஆனால் தூசு படிந்து யாரும் பராமரிக்கப்படாமல் உள்ளது. அக்கோயிலில் பூசை செய்வதற்காக மாங்குடி, மானாகுடி ஆகிய சிற்றூர்களை தானமாகக் கொடுத்ததாகத் தெரிகிறது.
நரிக்குடி கோயில்
மருது சகோதரர்கள் தம் சொந்த ஊரான நரிக்குடியில் இரண்டு கோயில்களைக் கட்டினர். ஒன்று அன்னதான மருகி விநாயகர் கோயில், இன்னொன்று அழகிய மீனாம்பிகை கோயில். பாண்டியன் கிணறு என்னும் பெயரில் ஒரு கிணற்றையும் வெட்டி உள்ளனர்.
வீரக்குடி கோயில்
வீரக்குடியில் உள்ள முருகன் கோயிலில் முன்புறத்தில் பெரிய மருதுவின் சிலை ஒன்று உள்ளது. எனவே அக்கோயிலைப் பெரிய மருது கட்டியதாகச் சொல்கிறார்கள்.
திருக்கோட்டியூர் கோயில்
மருது சகோதரர்கள் திருக்கோட்டியூரில் உள்ள தலத்தையும் குளத்தையும் புதுப்பித்து இறைவனுக்கு தேர் ஒன்றினையும் செய்தளித்துள்ளனர்.
திருப்பத்தூர் கோயில்
திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயிலில் திருத்தலைநாதர், சிவகாமியம்மன் திருவுருவங்கள் உள்ளன. அக்கோயிலுக்கு உள்ளே வைரவன் கோவில் உள்ளது. அக்கோயில் மண்டபத்தில் பெரிய மருது, சின்ன மருது சிலைகள் உள்ளன. அக்கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் குன்றக்குடி ஆதினத்திற்கு சொந்தமானது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 24ந் தேதியன்று மருது சகோதரர்களின் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இதைக் காணலாம்.
திருப்பாச்சேத்தி கோயில்
திருப்பாச்சேத்தியிலுள்ள சுந்தரவல்லியம்மன் கோயிலுக்கு மரகதப் பச்சையில் சிவலிங்கம் ஒன்று மருது சகோதரர்களால் செய்தளித்ததாகக் கருதப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருதுபாண்டியர்களின் திருப்பணிகள்
மதுரையில் மங்காத புகழ் நிறைந்து விளங்கும மீனாட்சி அம்மன் மீது மருதுபாண்டியர்களுக்கு எப்போதும் அளவற்ற பக்தி இருந்தது. சிவகங்சைச் சீமையில் வாழ்வு எல்லா மக்களும் காளையார்கோயிலின் உச்சியில் நின்று மதுரை கோபுரத்தை அந்த மீனாட்சி தாயை தரிசித்து மகிழ்ச்சி அடைந்ததாக வரலாறு கூறுகிறது.
மீனாட்சி தாய்க்குப் பிள்ளை போன்றவர்களும் மீனாட்சியின் அருள் பெற்றவர்களுமான மருது பாண்டியர்கள் சிறப்பு வாய்ந்த அழகுமிக்க இரண்டு திருவாச்சித் தீபங்களை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழங்கி இருக்கின்றார்கள்.
அந்த இரண்டு திருவாச்சித் தீபங்களும் இன்றைய தினத்திலும் மீனாட்சித் தாய்க்கு ஒளியினை வாரி வழங்கியபடியே மருதுபாண்டியர்களின் பெயரையும் புகழையும் பரப்பிக்கொண்டு இருக்கின்றன. தான் வழங்கிய திருவாச்சித் தீபங்களுக்குப் பசுவின் நெய்யைத் தவறாமல் வழங்குவதற்காக மருதுபாண்டியர்கள் ஆவியூர் என்ற கிராமத்தையே மானியமாக கொடுத்திருக்கின்றார்கள்.
'பூவனேந்தல், உப்பிலிக்குண்டு, கடம்பக்குளம், மக்கரந்தல், மாக்குளம், சீசனேந்தல் ஆகிய கிராமங்களை மதுரை மீனாட்சித் தாய்க்கு பூஜை கைங்கரியத்துக்காக ஒதுக்கி வைத்து ஒளிமயமான புகழை என்றும் பெற்றிருக்கிறார்கள் மருது சகோதரர்கள். தென்னகத்தில் திகழ்கிற ஆலயங்களில் தலைசிறந்தது மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலாகும். இந்த மீனாட்சிக் கோயிலில் உள்ள கல்யாண மண்டபம் சிறந்த சிறப்பையும் கைவண்ணத்தையும் உடையதாகும். இங்கு இன்றளவும் கல்யாண சுப காரியங்கள் ஊரில் பல பகுதிகளில் உள்ள மக்கள் கூடி முடிவு எடுக்கின்றனர். இந்த கல்யாண மண்டபத்தில் இருக்கும் பல்வேறு வகையான சிலைகளில் மருதுபாண்டியர்களின் குடும்பத்தினரின் சிலைகளும் அடங்கி உள்ளன. வடக்குப் பகுதியில் உள்ள தூணில் பெரிய மருதுவின் சிலை உள்ளது. அந்த கல்யாண மண்டபத்தை மருது சகோதரர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதன் சமீபத்தில் உள்ள மண்டபம் இன்று சேர்வைக்காரர் மண்டபம் என அழைக்கப்படுகிறது.
சிவகங்கைக்கு அருகில் உள்ள ஏரியூரில் அஷ்டோத்திர ஜபம் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் பெரிய மருது அவர்கள் மல்லாக்கோட்டைப் பகுதியில் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பல்வேறு போர் காரியங்களைச் செய்து கொண்டு பெரிய மருது அவர்கள் தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார். ஏரியூர் கண்மாய்க்கரை வரையில் காற்றாகப் பறந்து வந்த குதிரை கரைக்குச் சமீபமாக வந்ததும் தனது கால்களைப் பின்னிக்கொண்டு நகர மறுத்தது. எவ்வளவோ விரட்டியும் மிரட்டியும் அடித்தும்கூட குதிரை ஒரு அங்குலம் கூட நகர மறுத்தது. உடனே அங்கே இருந்தவர்களிடம் மருதரசர் 'என்னப்பா இந்த இடத்தில் விசேஷம்?” எனக் கேட்டார்.
'வந்துங்க - மன்னரை இந்த இடத்தில் கழுகு ஐயனார் குடி கொண்டிருக்கிறார். நீங்கள் அவருக்கு நல்லதொரு திருப்பணி செய்வதாக ஒத்துக்கொண்டால் உங்களுக்கு புண்ணியமும் கிடைக்கும். குதிரையும் விரைந்து செல்லும்” என்றார்கள்.
அப்படியா? என்று ஆலோசனையில் இறங்கினார் மருதரசர். 'சரி சில நன்செய், புன்செய் நிலங்களைக் கழுகு ஐயனார் கோயில் திருப்பணிக்காக மான்யமாக கொடுப்பேன்” என்றார். குதிரையும் பின்னிய கால்களைப் பிரித்துக் கொண்டு தொடர்ந்து ஓடத் தொடங்கியது. ஏரியூரில் எப்போதும் இன்றும்கூட பங்குனி உத்திர நன்னாளில் மருதுபாண்டியர்கள் பெயரால் 'அஷ்டோத்திர ஜபம்” மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இப்படி ஒவ்வொரு திருப்பணிக்கு ஒவ்வொரு காரண காரியங்கள் உள்ளன. அதை விரிவாகச் 'சொன்னால் புத்தகத்தின் பக்கங்கள் போதாது. எனவே தான் பல நிகழ்வுகளை சுருக்கமான அளவில் தரப்பட்டுள்ளது.
மருதுபாண்டியர்களின் மக்கள் சேவை
நரிக்குடியில் சத்திரம் காளையார் கோயில், குன்றக்குடி, திருப்பத்தூர், பாம்பனில் சத்திரம், அழகன் அலையான் குளத்தில் சத்திரம், சூடியூரில் சத்திரம், மானாமதுரையில் சத்திரம். அதன் அருகில் உள்ள முத்தனேந்தலில் சத்திரம், குன்றக்குடியில் சத்திரம் எனப் பற்பலச் சத்திரங்களை அமைத்து ஏழை எளிய மக்களுக்கு மருதுபாண்டியர்கள் செய்த தொண்டு வியந்து போற்றத்தக்கது.
மருதுபாண்டியர்கள் தங்கள் தாய் - தந்தையர் பெயரில் அமைத்த குளமும் - ஊரணியும் இன்றும் நல்ல நிலையில் இருப்பது அவர்களது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவைகள் பொன்னாத்தாள் குளம் - உடையார் சேர்வை ஊரணி, ஆத்தாகுளம் ஆவன.
மருது சகோதரர்கள் பற்றி இலக்கியங்கள்
மருது சகோதரர்களின் புகழ்பாடும் இலக்கியங்கள் மயூரகிக் கோவை, சிவகங்கை சரித்திரக்கும்பி, சிவகங்கைச் சரித்திர அம்மானையாகும். இவையனைத்தும் மருது சகோதரர்களின் புகழை எடுத்தியம்புகின்றன.
மயூரகிக் கோவை
இக்கோவை நூலின் ஆசிரியர் சாந்துப் புலவராவார். இவர் மருதுபாண்டியர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது மட்டும் தெரிகிறது. அவர் எவ்வளவு காலம் இருந்தார் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. இவர் தந்தை சர்க்கரைப் புலவர். இவர் இராமநாதபுரம் அரசவையில் அணுக்கனப் புலவராய் இருந்தவர். இவரின் பாடல்களில் மொத்தம் 536 கட்டளைக் கொண்டது. அதில் 14 பாடல்கள் பெரிய மருதுவின் புகழ் பாடுபவையாகும். இந்நூலை இயற்றியதற்காகக் காளையார் கோவில் அருகிலுள்ள சாத்தரசன் கோட்டை சமீபத்தில் உள்ள மகுதன்குடி என்னும் சிற்றூரை தானமாக மருதரசர் புலவருக்கு வழங்கியதாக ஆதாரம் உள்ளது.
செவிவழிச் செய்தியாக
1938ஆம் ஆண்டில் மருது சகோதரர்களைப் பற்றி உ.வே. சாமிநாத ஐயர் செவிவழியாகக் கேட்ட இரண்டு செய்திகளை எழுதியிருக்கிறார். 'முள்ளால் எழுதிய ஓலை” மருதுபாண்டியர் ஆகிய தலைப்புகளில் அவர் கூறும் செய்திகள் :
ஆங்கிலேயரின் தாக்குதலுக்குத் தப்பிக் காடுகளில் மறைந்து வாழ்ந்த பெரிய மருது ஒரு முறை திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் சிலந்தி நோயால் துன்புற்றுக் கொண்டிருந்தார். பகைவரின் ஆட்கள் அவரைத்தேடி அந்த ஊர் எல்லைக்குள் வந்துவிட்டனர் என்னும்செய்தியை அவரது நம்பகமான வேலையாள் தெரிவித்தார். மருதுபாண்டியர் ஓர் ஆடையைக் கிழித்துச் சிலந்தியை இறுகக்கட்டிக் கொண்டு தம் வளரியின் துணையுடன் குதிரை மீதேறி அவ்வூரினின்றும் அகன்றார். பின் குதிரையில் தப்பித்து ஒரு சிற்றூரை அடைந்தார்.
அவ்வூரை அடைந்த போது அவரைப் பசி வாட்டியது. ஒரு வயதான மூதாட்டி அவரை யார் என்று தெரியாமலேயே பழைய கூழுணவை அவருக்கு அளித்தார்.
உணவை உண்டபின் அயர்வினைப் போக்குவதன் பொருட்டு அம்மூதாட்டியின் வீட்டுக் கொட்டகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
பின்னர் அம்மூதாட்டிக்கு நன்றிக் கடனாக ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினார். தம்முடன் வந்த குதிரைக்காரனிடம் அவ்வீட்டு கூரையிலிருந்து ஓர் ஓலையையும், வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் செய்தார்.
அம்மூதாட்டிக்கு அவ்வூரை அளிப்பதாக எழுதிக் கொடுத்தார். அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் கொடுத்தால் வேண்டிய நன்மை கிடைக்கும் என்று கிழவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
வெளியூருக்குச் சென்றிருந்த தம் மக்கள் வந்தவுடன் அவர்கள் வழியாக அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காண்பித்து மூதாட்டி உதவி பெற விரும்பினார். ஆனால் அதற்குள் பெரியமருதுவை ஆங்கிலேயர்கள் கைதுசெய்து தூக்கிலிட்டனர். அவர் தூக்கிலேறுவதற்கு முன் 'தாம் செய்த அறக்கொடைகள் தொடர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆங்கிலேயர் உறுதி கொடுத்தனர். இந்தச் சூழலில் மூதாட்டி அவரிடமுள்ள ஓலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காண்பித்து அவர் வாழ்ந்த சிற்றூரை தானமாகப் பெற்றார். அச்சிற்றூர் இன்னும் பழஞ்சோற்றுக்குக் குருநாதனேந்தல் என்ற பெயருடன் விளங்குகிறது. தமக்கு ஓலை எழுதிக் கொடுத்தவர் பெரிய மருதாம் என்பதை அவர் இறந்தபின் தான் அறிந்து உள்ளம் உருகினார். இப்படிப் பல செய்திகள்.
Read Maruthupandiyar History in English...
Velu Nachiyar History in Tamil...
Sivagangai Palace photo gallery to view Read More ......
2008 - www.sivagangaiseemai.com
ALL Rights Reserved. Privacy Policy