மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 10

மருது பாண்டியரின் ஆட்சி

Maruthu Pandiyar Kalayarkoil Temple ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களது படிச் செலவை நான் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இணைந்து இந்த இரு சமஸ்தானங்களையும் மீண்டும் கைப்பற்ற இயலும். தங்களுக்கு செலுத்த வேண்டிய 'நஜர்” (செலவு தொகை) பின்னர் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று கடிதம் எழுதினார். மேலும் பிரதானி, சிவகங்கைச் சீமை நாட்டார்களுக்கும் தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பி, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிவகங்கைச் சீமையை விடுவிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். பிள்ளையின் கனவை நினைவாக்க மருது சகோதரர்கள் அல்லும் பகலும் உறங்காமல் பணியாற்றிக் கொண்டிருந்தனர். உள்நாட்டில் பணத்தைக் திரட்ட முயன்ற போது பல செல்வந்தர்கள் பணம் கொடுக்க மறுத்தார்கள். அதுமட்டுமா! நவாபின் பிடியில் ஆங்கிலயர்களின் கைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்த மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமையின் அரசர்களா? என்று கேலி செய்தார்கள். கட்டாயம் பணம் சேர்த்தாக வேண்டிய நிலையில் இருந்த மருது சகோதரர்கள் திருவிதாங்கூர் சென்றார்கள். அந்த நாட்டின் மன்னரிடம் அனுமதி பெற்று கொடிய புலி ஒன்றை 'கைவளரி' என்ற சிறிய ஆயுதத்தை மட்டுமே பயன்படுத்திக் கொன்று அந்த மன்னனிடம் மதிப்பைப் பெற்றார்கள். சின்னமருது 'வளரி” எறிந்து காட்டி திருவிதாங்கூர் மன்னனைத் திகைக்க வைத்தார். மருது சகோதரர்கள் இன்னும் பல சாதனைகளை செய்துகாட்டி திருவிதாங்கூர் மன்னரின் நிறைந்த அன்பைப் பெற்றார்கள். திருவிதாங்கூர் (இன்றைய கேரளா) மன்னர் மருது சகோதரர்களுக்குப் பெரும் பணத்தைக் கடனாகவும், கொஞ்சம் பணத்தைப் பரிசாகவும் கொடுத்தார். மருதுபாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நல்ல ஆட்சி நடந்தது. நிறைவான நீதி வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நவாப்பின் நேரடியான குத்தகையாளர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சிவகங்கைச் சீமையைப் பழைய நல்ல நிலைக்குக் கொண்டுவர, விடாது பாடுபட்டார்கள் மருது பாண்டியர்கள்.

மறுபடியும் கருமேகக் கூட்டங்கள்

மருது பாண்டியர்களின் ஆட்சி சிவகங்கைச் சீமையில் ஏற்பட்டுச் சரியாக மூன்றாண்டுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஆற்காட்டு நவாப்பின் கோபம் சிவகங்கைச் சீமையை நோக்கி மறுபடியும் திரும்பியது. மருதுபாண்டியர்கள் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் ஒப்பந்தப்படி ஆற்காட்டு நவாப்பிற்கு செலுத்த வேண்டிய 'கப்பம்” போய் சேரவில்லை என்ற நிலையில் பெரிதும் மனத்தாங்கல் கொண்டிருந்த ஆற்காடு நவாப் ஆங்கிலேயருக்குப் பல கடிதத்தினை எழுதினார். 'மேன்மை தங்கிய மன்னர் ஜார்ஜ் அவர்களே! இங்கே சிவகங்கை சீமை நமக்குச் செலுத்த வேண்டிய திறைப்பொருளைச் சரியாக செலுத்தவில்லை. அவர்களது பகுதியைச் சுற்றியுள்ள நமக்கு வேண்டியவர்களின் எல்லைகளிலும் மருதுபாண்டியர்கள் வீணாகத் தொல்லை தருகிறார்கள். காளையார் கோவில் காடுகளில் கள்ளர்களைப் பெருக்கி மற்ற பகுதிகளுக்கு அனுப்பி கொள்ளையடிக்கின்றார்கள். எனவே பெரும் படையோடு வந்து சிவகங்கைச் சீமையைச் சீரழித்து மருது பாண்டியர்களை ஒழித்துக்கட்டுங்கள்! என்று பல கடிதங்கள் நவாப்பால் எழுதப்பட்டன. வரும் காலத்தில் ஆற்காடு நவாப் என்ற பழகிய பழைய யானையைக் கொண்டே மற்ற தமிழகத்து அரசர்கள் என்ற புதிய யானைகளைப் பிடிக்க வேண்டும் என்ற திட்குழியைத் திடமாக தோண்டி வைத்திருந்த ஆங்கிலேயர் நவாபின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு ஆங்கிலேயர்கள் படை அனுப்பச் சம்மதித்தார்கள் கம்பெனியார்கள். 1783ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதியன்று ஆங்கிலேயர்கள் கர்னல் புல்லர்ட்டன் தலைமையில் ஒரு படையைச் சிவகங்கை சீமையை நோக்கி அனுப்பி வைத்தார்கள். கர்னல் புல்லர்ட்டன் அழைத்து வந்த ஆங்கிலப் படையோடு தயார் நிலையில் இருந்த ஆற்காடு நவாப்பின் படைகளும் இணைந்து சிவகங்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இப்படைகள் சிவகங்கைக்கு 20 மைல் தொலைவில் உள்ள மேலூரில் பாசறை அமைத்தன. அங்கிருந்து கர்னல் புல்லட்டன் மருதுபாண்டியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தான். உடனே எங்களுக்குச் சேர வேண்டிய திறைப்பொருள் வந்து சேரவேண்டும். அப்படி வராத பட்சத்தில் என் தலைமையில் படை சிவகங்கையைத் தாக்கும்” என்று.

omathurai sivathaiya images மருதுபாண்டியர்கள் மிகத் தீவிரமாக யோசனை செய்தார்கள். பெரியமருது அவர்கள் போர்புரியத் துடியாகத் துடித்தார். சின்னமருது பாண்டியருக்கும் தோளும் வாளும் துடித்தன. ஆனால் அமைச்சர் என்பதாலும், முன்பு மதிநுட்ப மந்திரி தாண்டவராயன் பிள்ளை அவர்களால் வளர்க்கப்பட்டதாலும் ஒரு யோசனையை அண்ணனான அரசருக்குத் தெரிவித்தார். 'அண்ணா நான் ஒரு தாழ்மையான யோசனையை உங்கள் முன் சமர்ப்பிக்கலாமா?” என சின்னமருது பாண்டியர் பவ்வியமாகக் கேட்டார். 'தம்பி” எது எப்படி செய்ய வேண்டுமோ அதை உன் விருப்பப்படியே செய்வோம்! நீ என்ன எதையும் நாட்டு நலனை மனதில் கொண்டுதானே ஆலோசிப்பாய்? யோசனை எதுவும் வேண்டாம். உனது முடிவை உடனே சொல்” என்றார் பெரிய மருதுபாண்டியர். அண்ணா கடந்த எட்டு ஆண்டுகளாக சிவகங்கைச் சீமையின் மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அடைந்திருக்கின்றார்கள். நமது மூன்றாண்டு கால ஆட்சியில்தான் அவர்கள் கொஞ்சம் சுதந்திரமாக மூச்சுவிடத் தொடங்கி இருக்கின்றார்கள். இந்த நிலையில் மறுபடியும் ஒரு யுத்தத்தைத் தொடர்ந்தால் குடிமக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். நம் மக்கள், வீரர்கள்தான். நாம் தான் வெற்றி பெறுவோம், ஆனால் வரும் துன்பங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் இப்போதிருக்கும் நிலையில் நமது நாடு தாங்குமா? எனவே நாம் புத்திசாலித்தனமாக இப்போதைக்குச் சமாதானமாகப் போய்விடுவோம் என்றார் சின்னமருது. இந்த யோசனைக் கேட்ட பெரிய மருது உனது விருப்பப்படியே செய்துகொள் என ஆணையிட்டுச் சென்றார்.

சின்ன மருது சிறிது நேரம் மற்ற அமைச்சர்கள், அரசுப் பிரதானிகளுடன், நாட்டார்கள் உடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை யோசனையைக் கேட்களானார். வெ ள்ளைக்காரத் தளபதி கர்னல் புல்லர்டன் அனுப்பிய தூதுவனை அழைத்து சின்னமருது 'தூதுவரே” நாங்கள் சமாதானத்தையே விரும்புகிறோம். இதன் தொடர்பாக நானே நேரில் வந்து நாளைக் காலையில் உங்கள் தளபதியிடம் நேரில் பேசுவதாகச் சொல்” என்று கூறினார். 'நல்லது மன்னர் அவர்களே! அப்படியே சொல்லிவிடுகிறேன்!” என்று கூறித் தூதுவன் விடை பெற்றான். சின்ன மருது அவர்கள் காலையில் குதிரையில் மேலூர் நோக்கிப் பறந்தார். அவரைச் சூழ்ந்து சிவகங்கை சீமையின் வீரர்களும் வந்து கொண்டிருந்தனர். சிவகங்கையை விட்டு சில மைல் தூரம் காட்டுப் பாதையில் குதிரைகள் சென்று கொண்டிருந்த போது, ஒரு குதிரை வீரனும் சிவகங்கைச் சீமையின் உடையணிந்தவனாக சின்ன மருதுவின் படைகளுடன் சேர்ந்து கொண்டான். இதைச் சின்னமுருதுவைத் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை. கர்னல் புல்லர்ட்டன் சின்ன மருது பாண்டியரை முழு மரியாதையோடு பணிந்து பவ்வியமாக தனது கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார். வாருங்கள். சிவகங்கைச் சீமையின் அரச பெருமானே! வாருங்கள் உங்களின் வருகையால் எங்களின் கூடாரம் பெருமை பெற்றுவிட்டது என்றார். நமக்கே இவ்வளவு மரியாதை தருகிறாரே!” அப்படியானால் ஆற்காட்டு நவாபிற்கு ஏன் அவர் மன்னர் ஜார்ஜ் மன்னருக்கு இவர் எப்படி எவ்வளவு மரியாதை கொடுப்பார்? என்று மனதுக்குள் வியந்து போன சின்ன மருதுபாண்டியர் துபாஷின் (மொழி பெயர்ப்பாளர்) உதவியோடு பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். சிறிது நேரத்தில் புல்லர்ட்டன் எழுந்து ஓ.கே. மிஸ்டர் சின்ன மருது என்று சந்தோஷமாக கைகுலுக்கி விடைபெற்றுக் கொண்டனர். இந்த சின்னமருது நிரம்பவும் அதிபுத்திசாலியாக இருக்கின்றானே! இவன் இருக்கும் வரை யாரும் சிவகங்கைச் சீமையைத் தொட முடியாதுதான்” இவ்வாறு கர்னல் புல்லர்ட்டன் தன் கூடாரத்திற்குள் தனிமையில் சத்தம் போட்டுத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பேச்சு வார்த்தையின் முடிவில் மருது பாண்டியர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து சேகரித்த பணத்திலிருந்து ஆங்கிலேயருக்கு நாற்பதாயிரத்தை அப்படியே அள்ளி கொடுத்தார்கள். மீதம் உள்ள ஐம்பதாயிரம் பணத்திற்காக கர்னல் புல்லர்ட்டன் தகுந்த கடன் பத்திரங்களை வாங்கிக் பத்திரப்படுத்திக் கொண்டு சந்தோஷம் பொங்க வெற்றி, வெற்றி என்று முழங்கிக்கொண்டு ஆற்காட்டு நவாப்பை நாடிப் போனார். சின்னமருதுவுக்கு மனதில் ஒரு கவலை மக்களின் நலப் பணிக்காக சேர்த்து வைத்த பணம் இப்படி அன்னியனுக்குப் போகிறதே என்ற மன அழுத்தம். தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு எப்படியே மக்கள் சிறிதுகாலம் சந்தோஷமாக இருப்பார்கள் அல்லவா அதுவே போதும் என்ற மன நிம்மதி அடைந்தார். சில நாட்களில் சின்ன மருது, பெரிய மருது அரசச் சகோதரர்கள் சந்தித்துக் கொண்டார்கள். சின்ன மருது பாண்டியர் தன் அண்ணனின் காலில் விழுந்து வணங்கினார். 'அண்ணா... தாங்கள் வேட்டையாடப் போவதாகப் புற்பட்டீர்களே! உண்மையிலேயே வேட்டைக்குத்தான் போனீர்களா?”
'ஆமாம். வேட்டைக்குத்தானே போனேன்” எனச் சிணுங்கினார் குழந்தையைப் போல பெரியமருது.
'இல்லை அண்ணா. நான் கர்னல் புல்லர்ட்டனைச் சந்திக்க மேலூருக்குப் போன போது நீங்களும் எங்கள் கூடக் கடைசியாக வந்து குதிரைப் படையில் இணைந்து கொண்டதை நான் பார்த்தேன். என் மீது தான் உங்களுக்கு எவ்வளவு பாசம்? என்று சொல்லிவிட்டு சின்னப்பிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுது தனது பாசத்தை பெரிய மருதுவின் மார்பில் கண்ணீரால் நனைத்தார். 'என்னப்பா இது' அது என் கடமை அல்லவா? என்று சொல்லிவிட்டு பதிலுக்குத் தானும் அழுதார். இதை நேரில் பார்த்த மற்ற தேசபிதாவிகளின் கண்களும் குளமாயின. பெரிய மருது சொன்னார், 'தம்பி, நாம் விரைவில் அந்த ஆற்காட்டு நவாப்பின் பிடியிலிருந்தும், வெ ள்ளைக்காரர்களின் பிடியில் இருந்தும் விடுதலை பெற்று, நம் நாட்டைச் சுதந்திர பூமியாக்க வேண்டும்.” 'அண்ணா அழாதீர்கள். நீங்கள் வீரத்தின் பிறப்பிடம் நீங்கள் அழலாமா? கூடாது, அண்ணா கூடாது. அடுத்த முறை நாம் அவர்களை வென்று சுதந்தரக் காற்றைக் கட்டாயம் சுவாசிப்போம்” என்று உணர்ச்சியுடன் சின்ன மருது கூறினார். அந்தக் காலம் விரைவில் வரும் என நாமும் நினைப்போம். அந்தக் காலமும் வந்தது.

மருது பாண்டியர்களின் நாட்டுப் பணிகள்

கி.பி. 1780ஆம் ஆண்டுக்குப் பின் சிவகங்கைப் பாளையத்தின் முழுப் பொறுப்பினையும் ஏற்ற மருது சகோதரர்கள் அரசு நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினர். பொறுப்பேற்ற தொடக்க ஆண்டுகளில் அவர்கள் சில போர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியும் அதற்குக் காரணம் வேலுநாச்சியாரின் மகள் வெள்ளை நாச்சியாரை தனக்குத் திருமணம் செய்து கொடுத்தால் முன்பு சேது மண்டலம் இருந்ததைப் போல் பிரிந்த நாட்டை இத்திருமணத்தின் மூலம் ஒன்று சேர்த்துவிடலாமே என்ற எண்ணத்தில் சேதுபதி எண்ணினார். அதற்கு மருது சகோதரர்கள் இடம் கொடுக்காமல் தங்களின் அன்பிற்குப் பாத்தியமான பெரிய வெங்கம் உடையனத் தேவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அதன் பொருட்டு மருதுபாண்டியர் மேல் முத்துராமலிங்க சேதுபதிக்கு எல்லையில்லாக் கோபம்! அடுத்து ஆற்காட்டு நவாப் முகமது அலியும் புதுக்கோட்டை மன்னர் இராயரகுநாதத் தொண்டைமானும் அவ்வப்போது சிவகங்கை மீது படையெடுத்தனர். இத்தொல்லை முதல் பத்தாண்டுகள் முடிய நீடித்தது. பத்தாண்டு காலம் ஓரளவு மருது சகோதரர்கள் அமைதியாக ஆட்சி நடத்திய காலமாகும். அவர்கள் தங்கள் ஆற்றலை நாட்டின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்தினர். அவர்கள் காலத்தில் கட்டிடக்கலை குறிப்பாகக் கேயிற்களை செழிப்புற்றது. இந்து கோயில்கள் பலவற்றைக் கட்டினர். இவற்றிற்கு வேண்டிய அளவு அறக்கொடைகளை நல்கினர். இவ்வாறே கிறிஸ்துவ ஆலயத்துக்கும் இஸ்லாமிய மசூதிக்கும் அற்கொடைகள் நிறுவினர். மக்களின் நன்மைக்காக அவர்கள் ஊரணிகளையும், குளங்களையும், கிணறுகளையும் வெட்டினர். இன்றளவும் சில கிராமங்களில் பாண்டியன் கிணறு என்று சொல்கிறார்கள். அத்தோடு நாட்டின் பாதுகாப்புக் கருதி கோட்டைகளையும் கட்டினர். பழைய அரண்மனைகளை புதுப்பித்தனர். நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு அவர் ஆற்றிய பணிகளை சிறிது பார்ப்போம். இராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6 கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய ராஜ கோபுரம் கட்டிச் சிறப்பித்துள்ளனர். அக்கோபுரத்தைக் கட்டுவதற்கு மானாமதுரையிலிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன. அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும். மானாமதுரையில், கருமலை என்ற இடத்தில் செங்கற்கள் எடுத்து மருது சகோதரர்கள் அக்கோபுரம் கட்டியதன் சிறப்பையும் அருமைப் பாட்டையும் ஒரு நாட்டுப்புறப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.

"கரும லையிலே கல்லெடுத்துக்
காளையார் கோயில் உண்டு பண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருதுவாரதைப் பாருங்கடி."


அக்கோயிலின் வெளிப்புறத்தின் கிழக்குப் பகுதியின் பழைய வாயிலுக்கு எதிரில் மருது சகோதரர்களின் சமாதிகள் உள்ளன. பழைய கோபுரத்தின் உள்ளே கருங்கல்லால் வடிக்கப்பட்ட அவர்களின் இருவரின் திருவுருவம் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதம் 24 மற்றும் 27 தேதிகளில் அவர்களுக்கு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

குன்றக்குடி கோயில்

குன்றக்குடி மலை மேல் கோபுரமும் மண்டபமும் கட்டியுள்ளனர். அங்குள்ள மருதாபுரி என்னும் குளமும் மருது சகோதரர்கள் வெட்டியதே ஆகும். அக்கோயிலில் அவர்களின் சிலைகள் பெரிய அளவில் இருக்கின்றன. அக்கோயிலிலுள்ள முருகனுக்குச் சாத்தப்படும் பொற்கவசத்தில் 'சின்னமருது உபயம்” என்னும் சொற்கள் காணப்படுகின்றன.

சருகணி மாதா கோயில்
சருகணியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தைத் திறம்பட நடத்துவதற்காக அச்சிற்றூரை மருது சகோதரர்கள் முழுமையாக அக்கோவிலுக்கு தானமாக வழங்கினர். அங்கு நடைபெறும் தேரோட்டத்துக்குரிய செலவுகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இப்போதும் திருவிழாக் காலங்களில் மருது சகோதரர்களின் குடிவழியினருக்கு முதல் மரியாதை அளித்த பின்னரே தேரோட்டம் நடைபெறுகிறது.