மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 14

Maruthu Pandiyar Kalayarkoil Temple 10-6-1801இல் மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்கும் இடையில் நடந்த போரில் பத்து ஐரோப்பியர்கள் இறந்தனர். ஆங்கிலேயருக்கு உறுதுணையாக வந்த கூலிப்படைகளில் நூறு பேர் மரணமடைந்தனர். இது மருது பாண்டியர்களின் படையினருக்குக் கிடைத்த மகத்தான இரண்டாவது வெற்றியாகும்.
ஆங்கிலேயர்களின் படையினர் பார்த்திபனூர் புறப்பட்டுப் பரமக்குடிக்கு வந்து விடுதலைப் படைகளைப் பற்றி பொது மக்களிடம் விசாரித்தனர். மக்கள் தவறான திசையைக் காட்டினர். பல்வேறு தாக்குதலுக்கும், சங்கடங்களுக்கும் ஆளான ஆங்கிலப்படை ஒரு வழியாக 14-6-1801இல் இராமநாதபுரத்தை அடைந்தது. மக்களை எதிர்நோக்கி இருந்த சண்டை பற்றியும் விடுதலைப் படைகளைப் பற்றியும் கர்னல் மார்ட்டிங் இடம் தெரிவித்தனர். இராமநாதபுரத்தில் மேலும் ஆறு நாட்கள் தங்கி விருந்துண்டு, அதன்பின் ஜூன் 22 அன்று இராமநாதபுரத்திலிருந்து நாற்பது மைல் தூரத்தில் இருந்த கமுதிக் கோட்டையில் முகாமிட்டனர். பழமனேரி நதிக்கு கீழ்ப்புறங்கரையில் அமைந்திருந்த பலமான கற்கோட்டையாகும். இது இரண்டு சுவர்களாலான, ஒன்று சிறிது உயரமானது, வட்ட வடிவமானது. ஒவ்வொன்றிலும் ஆறு பாதுகாப்புச் சுவர்கள் உள்ளனவாம். அவற்றிற்கிடையே கற்குளம் ஒன்று இருந்தது. மேல் சுவரில் தானியக் கிடங்கும் இருந்தனவாம். மூன்றாவது படைப் பிரிவிலிருந்து ஒரு கம்பெனியும், இருநூறு வேலையாட்களும் அபரிமிதமான வெடி மருந்துகளும், மற்ற பொருள்களுடன் லெட்டினன்ட் கிரீவ்ஸ் படைஅதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தாராம். இவ்விபரத்தினை கர்னல் ஜேம்ஸ்வேல்ஸ்-இன் போர் கால நினைவுகள் மூலம் அவர் கைப்பட எழுதியதின் மூலம் கிடைக்கப் பெற்றது. மேலும் வரும் விபரங்கள் அனைத்தும் அவர் மூலம் நமக்கு கிடைக்கப் பெற்றன.

24-7-1801இல் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூரை ஆங்கிலப்படைகள் அடைந்தன. இங்கு கர்னல் இன்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு படை வந்து சேர்ந்து கொண்டது.
நத்தத்தில் நடந்த போரில் காப்டன் ஹட்லண்டும், லெப்டினன்ட் பிர்த்தும் படுகாயம் அடைந்தனர். சில ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
புதுக்கோட்டைத் தொண்டைமான் அனுப்பிய கூலிப்படைகளும் படையெடுப்பில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டன. மருதுபாண்டியர்களின் படைவீரர்கள் முதன் முதலாக எதிரிப்படைகளை நோக்கி தீப்பந்தங்களையும், சிறிய அளவிலான ராக்கெட்டுகளையும் (திப்பு சுல்தானிடம் இருந்து பெறப் பெற்ற) பயன்படுத்தினார்கள்.
28-7-1801இல் ஆங்கிலேயர்களின் தலைமையில் திரண்ட ஏழாயிரம் படை வீரர்கள் ஒக்கூரைக் கைப்பற்றினார்கள். அந்த ஊரைத் தீக்கிரையாக்கினர்.

30-7-1801இல் பல நூறு வீரர்களைப் பலி கொடுத்து, கடும் பீரங்கித் தாக்குதலை நடத்தி சின்னமருதுவின் தலைநகரமான சிறுவயலைக் கைப்பற்றினார். ஆங்கிலேயரிடம் ஐநூற்றி நாற்பது ஐரோப்பியர்கள், மலாய் துப்பாக்கி வீரர்கள் மூன்று சுதேசி ரெஜிமென்ட் ஆகியவன இருந்தன. அப்படைக்கு கர்னல் அக்னியூ தலைமையேற்று முன்னே சென்று கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களின் படைத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிறிய அளவில் துப்பாக்கிச் சுடுதலாலும், சரியில்லாத ராக்கெட்களை உபயோகித்தும் அவர்களின் நான்கு பீரங்கிகளுடன் பின் வாங்கிவிட்டனர். எந்தவித எதிர்ப்பும் கொடுக்காமல் அவர்களின் சொந்த வீடுகளுக்கு மருது படைகளே தீ வைத்துவிட்டு அந்த அடர்ந்த காட்டினுள் (அரணாக அமைத்துக் கொண்டு போர் செய்ய) மறைந்து கொண்டனர். எரிந்து கொண்டிருந்த சிறுவயலை ஆங்கிலேயர் கைப்பற்றிக் கொண்டனர்.
31-7-1801இல் சிறுவயலில் ஆங்கிலேயர்களின் சண்டை ஆரம்பமானது. காளையார் கோயிலை நோக்கி ஆங்கிலேயர்களின் படை முன்னேறியது. தமிழகத்தின் ஏன்

Maruthu Pandiyar Kalayarkoil Temple தென்னிந்தியா முழுவதிலுமே கூட எந்த இடத்திலும் சிறுவயல் காளையார் கோயில் இடைப்பட்ட இடத்தில் அமைந்த காட்டைப் போன்று அடர்ந்த காடு வேறொன்றும் கிடையாது. நான் மின்சார வாரியத்தில் காசாளராகப் பணியேற்க 29-1-1971ம் தேதி கல்லலுக்கு (சிறுவயலுக்கு சமீபத்தில் உள்ள ஊர்) போனேன். அந்த சந்தர்ப்பத்தில் சிவகங்கை மன்னர் சண்முகராஜா (1941-1963) சிவகங்கை கல்லூரியை நிறுவியவர். அவர்களின் மூத்த மகனான மேதகு கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா அவர்களுடன் ஒரு நாள் அக்காட்டில் வேட்டையாட அவர்களுடன் சென்ற அனுபவம் எனக்கு உள்ளது. அந்த நாளை வாசகர்கள் உடன் பகிர்ந்து கொள்கிறேன் அப்பொழுது நாங்கள் மான்கள், முயல்கள், மயில்கள், நல்ல பாம்புகள் போன்றவைகள் நிறையப் பார்த்தோம்.

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே அப்படி இருந்தால், நமது வரலாற்றுக் காலமான 1781ஆம் ஆண்டு கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ்-இன் போர்கால நினைவுகள் மூலம் அடர்ந்த காடு என்பதை ஏற்றுக்கொள்வதாக உள்ளது. வெ ள்ளையர்கள் காளையார் கோயிலைக் காட்டைக் கடந்து சிவகங்கைச் சீமையை கைப்பற்றுவது என்ற முடிவுடன் போரிட்டனர்.
31-7-1801இல் ஆங்கிலப்படைகளுடன், புதுக்கோட்டை தொண்டைமான் அனுப்பிய கூலிப்படைகளுடன், இரண்டாயிரம் காடுவெட்டிகளையும் அனுப்பி வைத்தார். இதன் மூலம் காட்டை அழித்து, போருக்கு வசதியாக வழிகாட்டவும் ஆயத்தமானார்கள்.

1-8-1801இல் மேஜர் ஷெப்பர்டு தலைமையில் படை ஒன்று காளையார் கோயில் காட்டுக்குள் இருந்து கிராமத்தைக் கைப்பற்றியது. மருதுபாண்டியர்களின் படைக்கும் ஆங்கிலேயருக்கும் ஒரு சிறிய யுத்தம். சேதம் இருதரப்பாருக்கும் அதிகம் இல்லை. ஒரு மைல் தூரம் காட்டுக்குள் பாதை அமைத்திருந்தனர்.
2-8-1801இல் மேஜர் ஜேம்ஸ் கிரஹாமின் தலைமையில் 150 ஐரோப்பியர்கள் மலேயா துப்பாக்கி வீரர்கள் உதவியுடன், அமோகா என்றால் கொல் என்பதாகும். மலேயா மொழியில் சண்டை நடைபெறும் போருதல்லால் அப்படித்தான் தாக்கினார்கள். அறுநூறு கெஜம் பாதை அமைத்தனர். இதைச் செய்து முடிப்பதற்குள் விடுதலை வீரர்கள் (பொலிகார்கள்) எதிரிகளில் பலரை மறைந்திருந்து கொன்றார்கள் (கொரில்லா போர்த்திறமை மூலம்)
3-8-1801இல் மருது பாண்டியர்களது விடுதலை வீரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நானூறு கெஜம் மட்டும் காட்டுக்குள் வழி கண்டுபிடித்தனர். மேஜர் கிரஹாம் தலைமையில் சென்ற படையினர் தேவைக்கு அதிகமான உணவு, தீனி ஆகியவற்றுடன் முகாமுக்கு திரும்பினர்.

4-8-1801இல் காட்டுக்குள் ஆங்கிலேயர்கள், மருது பாண்டியரின் சிறிய அரண் ஆங்கிலேயர்களால் நொறுக்கப்பட்டது. இரணடு தரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.
5-8-1801இல் மேலும் 440 கெஜம் தூரத்துக்குப் பாதை அமைக்க மிகவும் கஷ்டப்படடனர். அன்று மருதுபாண்டியர்களின் விடுதலைப் படைகளின் தாக்குதல் கடுமையாக இருந்தது. காட்டின் அடர்த்தியும் ஈ கூட நுழைய முடியாமலும் சூரியன் ஒளி கூட உட்புக முடியாமலும் நெருக்கத்தைப் பெற்றிருந்ததாம். மருதுவின் வீரர்கள் காட்டினுள் பலர் இறந்தும், ஆங்காங்கே அவர்களின் இரத்தம் சிதறிக் கிடந்ததால் அவர்களது இழப்பு அதிகமாகவே இருந்தது.

ஒவ்வொரு நாளும் மருதுபாண்டியர்கள் தங்களது விடுதலை வீரர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தினார்கள். ஆங்கிலேயர்கள் நுழைய முடியாத காடுகளில் பெரிய மருது சிங்கம் போலச் சுற்றிச் சுழன்று ஆங்கிலேயர்களை உள்ளே நுழையவிடாமல் 32 நாட்கள் தன் படையுடன் போராடி இருக்கின்றார். இந்த வீரம் செறிந்த போராட்டமே மருதுபாண்டியர்களின் கடைசிக் களமாக அமைந்தது. இந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைத்தான் ஆங்கிலேயரான கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ்-ன் போர்கால நினைவுகள் மூலம் அறியப்படும் நிகழ்ச்சி. இச்செய்திகள் வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு பொக்கிசம். அதை முழுமையும் எழுதினால் 100 பக்கங்கள் இருந்தாலும் போதாது. அதில் சிலவற்றைத்தான் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

6-8-1801ல் கடும் போர். ஆங்கிலேயர் 231 கெஜம் தூரம் மட்டுமே பாதை போட்டார்கள். 7-8-1801ல் காடு முழுக்க மனித உடல்கள் தெரித்துச் சிதறிக் கிடந்தன. விடுதலை வீரர்கள் கடுமையாக ஆங்கிலப் படைகளைத் தாக்கினார்கள். இருந்தாலும் ஆங்கிலப் படைகள் மேஜர் மாலியோல்ட் தலைமையிலும், லெப்டினன்ட் கர்னல் டால்ரிம்பின் தலைமையிலும் படைகள் முன்னேறின. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மருதுபாண்டியரிடம் இருந்து பிரிந்து உடையத்தேவரின் சித்தப்பா ஒருவர் ஆங்கிலேயரைச் சந்தித்து மருதுபாண்டியரைக் காட்டி கொடுப்பதற்கும், அவர்களின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் நன்கு அறிந்திருந்தால் கர்னல் ஏ.எம். அக்னியூவிடம் அந்த பிரதேசங்களின் அமைப்புகளையும், மிக உபயோககரமான செய்திகளையும் தாக்குதல் தொடர்பான திட்டங்களையும் கூறினார். இது ஆங்கிலேயருக்கு கிடைத்த வெற்றி.

8-8-1801இல் காளையர் கோயில் கோபுரம் கண்ணுக்கெட்டா தொலைவில் தெரிந்தது. ஐநூறு கெஜம் பாதை அமைத்தார்கள் ஆங்கிலேயர்கள்.
9-8-1801இல் ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களின் வீரப்படை வீரர்களை விரட்டி அடித்தார்கள். இந்த ஒரு நாளில் வெ ள்ளையர்களின் கை ஓங்கி இருந்தது. இந்த ஒரு நாள் வெற்றியைப் பயன்படுத்தி அவர்கள் 100 சதுர அடி அளவு கொண்ட காவல் அரண் ஒன்றை அமைத்துக் கொண்டார்கள்.
10-8-1801இல் பாதுகாப்புப் படையை கர்னல் இன்னஸ் நடத்திச் சென்றார். அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அவர்கள் 500 கெஜங்கள் தூரத்தை வெட்டிச் சென்றனர். காப்டன் ப்ளாக்பர்ன் சிறிய படையுடன் எதிரி முகாமுக்குத் தேவையான பொருள்களுடன் வருவதாக அவர்களுக்கு செய்தி வந்தது.
11-8-1801இல் கர்னல் டால்ரிம்பில் தலைமையிலும், மேஜர் மாபெர்ஸன் தலைமையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி 450 கெஜத் தூரத்தை வெட்டிவிட்டனர்.

12-8-1801இல் கர்னல் டால்ரிம்பின் தலைமையில் வேலை செய்யும் பொழுது மருது படையினரால் சிறிது தாக்குதலுக்குட்டபட்டனர். 450 கஜ தூரத்தை வெட்டிவிட்டனர்.
13-8-1801இல் மேஜர் ஸெப்பர்ட் தலைமையில் தீவனப்படையும், எட்டையபுரத்தின் (வெ ள்ளையர்களின் நண்பரான) படையும் வடகிழக்காக பதினோரு மைல்கள் வரை சென்றன.
தினந்தோறும், கடும் வெயிலாலும், மழையாலும் துன்பப்பட்ட ஆங்கிலப்படை நோயால் துயருறறு முடிவில் 1-9-1801இல் 32 நாட்கள் கடுமையாக உழைத்து காட்டில் அமைத்த பல அமைப்புகளை அழிக்க, வழக்கம் போல் பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட வேலைப் பிளவு பாதுகாப்பு முகாமை அழித்து சுற்றி இருந்த மரம்செடிகளை எரித்துவிட்டு எல்லோரும் எந்த எதிர்ப்புமின்றி முகாமுக்கு ஆங்கிலப் படைகள் திரும்பிவிட்டனர். காளையார் கோயிலைப் பிடிக்க முடியாமல், இந்த நிகழ்வுகள் மருதுபாண்டியரின் வீரத்துக்கு இன்றளவும் வரலாற்று ஆசிரியர்களால் புகழ்ந்து பேசப்படும் இடம்.

கௌரி வல்லபத் தேவரின் முடி சூட்டுவிழா
அன்னாளில் மருதுபாண்டியருக்கு மிகவும் எதிரியாகக் கருதப்பட்டவரான கௌரி வல்லபருக்கு நடைபெற்ற முடிசூட்டும் விழாவை கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ்-இன் நாட்குறிப்பில் இருந்து புதிய சேர்வைகாரரை நியமனம் செய்வதற்கு செப்டம்பர் 12ம் நாள் சிறந்த நாள் என்று இங்குள்ள பிராமணர்களும் மற்றவர்களும் முடிவு செய்தனர். உடையத்தேவர் என்ற கௌரித்தேவர் அலங்காரம் செய்து கொண்டு ...