மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 12

வஞ்சகனுக்கும் ஒரு சிலை

Maruthu Pandiyar Kalayarkoil Temple
வலையன் ஒருவன் பெரிய மருதுவுக்கு நெருக்கமானவனாக இருந்தான். அவன் பெயர் கரடிக்கருத்தான் என்பதாகும். பெரியமருது வேட்டைக்குச் செல்லும் போதெல்லாம் அவனும் உடன் செல்வது வழக்கம். அவனது வேட்டைத்திறமை பெரிய மருதுவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு முறை இருவரும் வேட்டைக்குச் சென்றனர். அவன் மட்டும் தனித்து ஒரு விலங்கினைத் துரத்திச் சென்றான். நீண்ட நேரம் அவன் திரும்பாமல் இருந்ததைக் கண்ட பெரிய மருது வேதனை கண்டார். ஆனால் வெகுநேரம் கழித்து அவ்வலையன் ஒரு பெரிய கரடியைத் தோளில் தூக்கிவைத்து அவர் காலடியில் போட்டான். போர்க்களத்தில் அவன் மருது சகோதரர்களுடன் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டான். அவனது வீரத்தை பாராட்டும் வகையில் காளையார் கோயில் பழைய கோபுர வாயிலின் வலப்புறத்தில் பெரிய மருது அவனின் சிலையை வைத்தார். அச்சிலையில் அவன் கையில் துப்பாக்கி வைத்து இருப்பதை காணலாம். இத்தகைய வீரனே பிற்காலத்தில் பணத்துக்காகப் பெரிய மருதுவைக் காட்டிக் கொடுக்கும் வஞ்சகனாக மாறினான்.

அரசன் எறிந்த வளரி அக்கரை சென்ற கதை
பெரிய மருதுவும், சின்ன மருதுவும் வளரி வீசுவதில் வல்லவர்கள். வளரி என்றும் ஆயுதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆற்றலும், திறமையும் படைத்த ஒருவர் முன்னூறு அடி தூரத்தில் உள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை ஆச்சரியப்படத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வீழ்த்திவிடலாம். ஆங்கிலேயத் தளபதி கர்னல் வேல்ஷ், சின்ன மருதுதான் முதன் முதலாக ஈட்டி எறியவும், வளரியைச் சுழற்றி எறியவும் தனக்குக் கற்றுக் கொடுத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சின்ன மருதுவைப் போலவே, பெரிய மருதுவும், வளரி எறிவதில் வல்லவராகவும் நிகரற்றவராகவும் விளங்கினார். ஒரு முறை பெரிய மருது மதுரை சென்றிருந்தார். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளத்திலிருந்து வளரியை வீச ஆயத்தங்கள் செய்தார். பெரிய மருது தெப்பக்குளத்தில் நின்று கொண்டு தனது கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றிக் கொண்டு, வளரியை வேகமாக விட்டெறிந்தார். அவர் எறிந்த வளரி மாரியம்மன் தெப்பக்குளத்தின் நடு மண்டபத்தைத் தொடாமல் அக்கரையில் போய் விழுந்தது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு மருதரசன் தனது மூச்சைப் பிடித்து வளரியை மிக வேகமாக எறிந்த வேகத்தில் அவர் இடுப்பில் கட்டியிருந்த தங்க அரைஞான் தெரித்து விழுந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் தான் சென்ற 31-10-2007 அன்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மருது பாண்டியர்களின் சிலையை அவர் கைப்பட திறந்து வைத்தார்.

மயிலப்பன் சேர்வைக்காரர்
மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரது ராணுவப் பணியில் இருந்தார். இவர் 'மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் துவக்கத்தில் கம்பெனியார் திடீரென இராமநாதபுரம் அரண்மனையை வளைத்து சேதுபதி மன்னரை கைது செய்தனர். திருச்சிக் கோட்டையில் இருந்து முத்துராமலிங்க சேதுபதியை காவலர்களுக்கு தெரியாமல் தப்புதவதற்குக்கூட முயன்றார். அத்திட்டம் நிறைவேறவில்லை. இராமநாதபுரம் சீமைக்கு திரும்பி வந்து நாட்டுத் தலைவர்களை சந்தித்து, மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளைக் குறித்து ஆலோசித்தார். அப்பொழுது நடைபெற்ற முதுகுளத்தூர் வட்டாரத்தில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய வீரபுருசர் அப்பொழுது உள்ள காலகட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு முகவை மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கும் வைகை ஆற்று நீரின் சம்பந்தமாகவும் பல எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக அவ்வப்பொழுது பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்ற அச்சமயத்தில் மயிலப்பர் சேதுபதியின் அன்புக் கட்டுப்பாட்டிருந்ததினால் மருதுபாண்டியருக்கும் அவருக்கும் பகை உணர்வு இருந்தது. காலப்போக்கில் மருதுபாண்டியரின் விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த பொழுது அவரின் உண்மையான குணத்தைப் புரிந்து அவரின் நோக்கத்தை திருச்சிக் கோட்டையில் கைதாகிய முத்துராமலிங்க சேதுபதியிடம் விபரம் சொல்லி மருதுபாண்டியரின் பால் உள்ள கசப்பான நிலையை மறையச்

செய்தார். மயிலப்பர், சேதுபதி, மருதுபாண்டியர் இணைந்து செயல்பட்டனர். அதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமாயின் கமுதி கோட்டையைத் தகர்த்து அங்குள்ள போராளிகளை விடுதலை செய்ய மருதுபாண்டியர் கொடுத்துதவிய வீரர்கள் மற்றும் போர் ஆயுதங்கள், அன்னாளில் ஆங்கிலேயர்களுக்கு பல வழிகளில் கடுக்காய் கொடுத்த பெரிய போராளி வீரர்கள் இந்த 'மயிலப்ப சேர்வை”, 'நைனப்பன் சேர்வையும் பெரியமருதுவும்” நைனப்பன் சேர்வை என்ற வீரமிக்க தளபதி ஒருவர் மருதுபாண்டியர்களின் படையில் இருந்தார். அவரது வீரத்தையும், உடல் வலிமையையும் பற்றிக் கேள்வியுற்ற பெரிய மருது அவர்கள் அதைச் சோதிக்க விரும்பினார்.

'நைனப்பன் சேர்வை” நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், ஏற்றுக்கொள்ளச் சம்மதமா? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர். 'சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் நைனப்பர். போட்டி இதுதான். சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும். இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார். ஆக மொத்தம் 50 கி.மீட்டர். இந்த தூரத்தை நைனப்ன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக் கடக்க வேண்டும். இதுதான் போட்டி. போட்டி தொடங்கியது. 'நைனப்பன் சேர்வை அவர்களே! நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பர்லாங் தூரம் ஓடுங்கள். அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றாராம். ஓடினார்.... பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது. அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார். குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நைனப்பரும் ஓடினார். வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டார்கள.

சிலர் என்ன இது கொடுமை! மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்? என. பலர் 'சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும.; நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் மன்னர். கொடுமையாக எதையும் செய்யமாட்டார்” என்று பேசிக் கொண்டனர்.
ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது. போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள், அதுதான் இல்லை. அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே! என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பர் தனது இடுப்பில் இருந்த 'வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார். முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது. வழியைப் பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடிச் சரியா வயலை அடைந்துவிடுகிறார். மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓடத் தலைப்பட்ட நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் பெரியமருது பாண்டியர். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

'நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன். நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையைவிட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன். உங்களது வீரம் வாழ்க! வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள்” என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் - உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன், பொருளும் வழங்கினார் பெரிய மருதுபாண்டியர்.

omathurai sivathaiya images நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது. அதை அவரின் வாரிசு தார் கொடுத்துள்ளனர். இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது. ஒரு சமயம் மருதுபாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது. புலியோடு போராடி அதனைக் கொன்றார். பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருதுபாண்டியர் அவர்களின் காலடியில் 'அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார். ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பல்பட்ட, நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன. நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மருதுபாண்டியர் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.

நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர். அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள். சிவகங்கைக்கருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு நைனப்பர் ஊரணி என்று அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது. இப்படிப் பல நூறு வீர நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு மக்களை வீரமிக்கவர்களாக ஆக்கி வைத்திருந்தார் பெரிய மருதுபாண்டியர்.

சுபேதார் சுலைமானுக்கு பெரிய மருது கட்டிய சமாதி
பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் பழைய கோபுரத்தைக் காட்டிலும் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது, அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள், கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது. அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார். அவர் யார் தெரியுமா? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் சுலைமான் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும், மருதுபாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன். சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருதுபாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட சுலைமானுக்கு யோசனை சொல்லப்பட்டதாம். அந்த சமயத்தில் அங்கு வந்த சுலைமான் மருதுபாண்டியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அதிகமாக வரும் நீர் ஊற்றை தான் தடுத்துவிடுவதாகச் சொல்கிறான். அதுகேட்டு மன்னர் மருதிருவர் மன மகிழ்ச்சி அடைகிறார்கள். உடனே சுலைமானுக்கு நீர் ஊற்றை அடைக்க தேவையானவற்றை கொடுக்க வேலையாட்களிடம் பணித்தார்.

சுலைமான் பத்து வண்டி அளவு அயிரை மீன்கள் வேண்டும் என்றார். அடுத்த நாள் காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி அனுப்பி அயிரை மீன்களையும் அஸ்திவாரம் தோண்டிய நீர் தேக்கிய பகுதிகளில் சுலைமான் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டதால் ஒவ்வொரு மீனும் மணலைகளைக் கவ்விக்கொண்டு நீர் ஊற்றை அடைத்தது. அதன் பின்னர் நீரின் கசிவு ஏற்படாததால் கோபுரம் கட்டும் வேலை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது. பெரியமருதுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சுலைமானிடம் உனக்கு என்ன வேண்டும் என மருதரசன் கேட்டார். அதற்கு சுலைமான் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்த சுலைமான் பல மொழி பேசும் திறமை பெற்றவர். அத்தோடு வானத்தில் பறக்கும் பறவையை குறிதவறாது வேட்டையாடும் கலையை நன்கறிந்தவர். அத்துடன் மல்யுத்தம், சிலம்பு ஆட்டம் கற்றறிந்தவர், மகா புத்திசாலி,

அப்படிப்பட்டவரை மருது அவர்கள் தனது அரண்மனையிலேயே அதன் உள்ளே உள்ள குதிரை லாயத்தின் முழுப் பொறுப்பையும் கவனிக்க முழு அதிகாரத்தை சுலைமானுக்கு கொடுத்து கௌரவித்தார். காலப் போக்கில் மருது சகோதரர்களின் உண்மையான உணர்வுகளும் சிறந்த சிந்தனைகளும் அவர்களுக்கு மக்களிடத்தில் அவர்கள் காட்டும் அன்பை நேரில் பார்த்த பொழுது சுபேதார் சுலைமான் மனம் மாறினார். அவர் உளவாளியாக வந்த ஆற்காட்டருக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை. இப்படிப் பல மாதங்கள் உருண்டோடின. ஒரு நாள் பெரிய மருது சிவகங்கைக்கு அரசு வேலையாக சென்றிருந்தார். சின்ன மருது அவரின் நம்பிக்கைக்கு உரிய கரடிக் கறுத்தானைக் கூட்டிக் கொண்டு காளையார் கோயிலுக்கு சென்றார். (இந்தக் கரடி கறுத்தான் தான் பின்னாளில் பொருளுக்கு ஆசைப்பட்டு பெரிய மருதுபாண்டியரை காட்டிக் கொடுத்தவன்) அங்கு ஒரு வெ ள்ளைப்புறா பறந்து சென்றது. சின்ன மருது தனது வளரியை எடுத்து பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி வீசினார்.

குறிதவறாது புறா மீது வளரி தாக்கி, புறா கீழே விழுந்து கொண்டிருந்தது. அது தரையில் விழு முன் சுலையின் புறாவை தனது கையில் பிடித்தார். அதை அருகில் இருந்து பார்த்த சின்ன மருதுவுக்கு ஒரே ஆச்சரியம்! வளரியால் வீழ்த்திய புறாவை இடையிலேயே பிடிப்பவன் தனக்கு அடுத்து இந்த கறுத்தான் ஒருவனே. இந்த வித்தையை சுலைமானுக்கு எப்படித் தெரியும் என்று அப்பொழுது கறுத்தான் சுலைமானின் கையிலிருந்து புறாவைக் கவனித்தான். அதன் கால்களில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதை உடனே சின்னமருதுவும் நோக்கினார். அதன் எழுத்து உருது மொழியில் இருந்தது. அதில் ஆற்காட்டான் எப்பொழுது காளையார் கோயிலுக்கு படையெடுத்து வரலாம் என சுலைமானின் யோசனையைக் கேட்டு எழுதி இருந்தது.

இந்தச் செய்தியை படித்தமட்டில் சின்னமருதுவுக்கு கோபம் எல்லை மீறிப் போய்விட்டது. அட ராஜதுரோகி! உன்னை எனது அண்ணன் பெரிய மருது எப்படியெல்லாம் உயர்வாக நடத்துகிறார். அதற்கு நீ காட்டும் நன்றிக் கடனார்? என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார். இது கண்டு சுலைமானுக்கு மிகுந்த மனவேதனை. உடனே மன்னர் அவர்களே! நான் சொல்லும் விளக்கத்தினை தயவுசெய்து செவிமடுத்துக் கேட்கவும், நான் ஒற்றனாய் வந்தது உண்மை. இங்கு உங்களையும், பெரிய மன்னரையும் கண்டவுடன் அவர் ஆட்சியையும், அவர் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பை பார்த்த பின்பு, நான் வந்த வேலையை மறந்தேன். அத்தோடு ஆற்காட்டருக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை. அதனால்தான் அவர்கள் எனது நோக்கம் அறிய புறா மூலம் தூதுவிட்டுள்ளனர் என்றார். சின்னமருது எந்த விளக்கத்தையும் கேட்பதாக இல்லை. உடனே அவருக்குத் தெரிந்த கத்திச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டில் எப்படியும் சுலைமானின் உயிரைப் போக்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்கு சுலைமானும் சளைக்காமல் சின்னமருதுவுக்கு சமமாக அவரும் ஈடு கொடுத்து சமாளித்தார். ஆனால் கடைசியில் சின்னமருது அவர்களின் மர்ம அடி (தற்போது சொல்லுகிற குங்பூ) அவரின் நெற்றியில் பட்டு அக்கணமே சுலைமானின் உயிர் பிரிந்தது.

சிவகங்கையில் உள்ள பெரிய மருதுவுக்கு இந்த துயரமான செய்தி கிடைத்தவுடன் மிகவும் மன வேதனைப்பட்டார். மனம் மாறிய சுலைமானை சின்னமருது கொன்றுவிட்டானே என அப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு செயலை சின்னமருது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும். தனது உண்மையான ஊழியன் என எண்ணப்பட்ட கரடிக் கறுத்தான் மருதுபாண்டியரைக் காட்டிக் கொடுத்தான். ஆனால் ஒற்றனாய் வந்த சுலைமான மருதுவுக்கு அதரவாக இருந்துள்ளார். இது காலத்தின் கோலம் தானே?
பெரியமருதுவின் மனம் அம்மாவீரனுக்கு, அவரின் ஞாபகமாக பட்டரைக் கண்மாய் என்ற ஊரில் ஒரு பெரிய சமாதி ஒன்றைக் கட்டினார். அத்தோடு அவரின் சந்ததியினருக்கு பல நிலன்களைத் தானமாக கொடுத்தாராம். அந்த நினைவிடத்தில் இன்றும் விவசாய காலம் ஆரம்பிக்கும் பொழுதும், பின் அறுவடை நடைபெறும் காலத்திலும் சுபேதார் சுலைமானின் சமாதியில் காணிக்கை செலுத்தி அவரின் நினைவாக எல்லா சமூகத்தினரும் வணங்கிச் செல்வது அங்கு வழக்கமாக கொண்டுள்ளனர். இச்செய்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் மருதுபாண்டியர் நினைவு நாளில் சொல்லக் கேட்டது.

மருதுபாண்டியருக்கும் கூட்டுப் படைகளுக்கும் நடைபெற்ற போர்கள்
1788ஆம் ஆண்டில் புதுக்கோட்டைக்கும், சிவகங்கைச் சீமைக்கும் இடையே எல்லைத் தகராறு.
1792ஆம் ஆண்டிலும் 'மறுபடியும்” புதுக்கோட்டை எல்லையைக் காரணம் காட்டி சிவகங்கைச் சீமையுடன் போர் நடைபெற்று, வெ ள்ளையர்களின் அதிகாரத்தினால் இருவருக்கு சமாதான ஒப்பந்தத்தின் மூலமாக உயிர்பலி இல்லாமல் நடந்ததாம்.
1780ஆம் ஆண்டு துவக்கத்தில் கர்னல் ஸ்டூவர்ட்டின் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை சிவகங்கை நோக்கிப் படையெடுத்து அப்படைகளில் ஆற்காட்டுப் படை புதுக்கோட்டைப் படை மதுரைப் படை மற்றும் இராமநாதபுரச் சீமையின் படைகள் சுற்றி சூழ்ந்திருந்த எல்லாச் சக்திகளுமே சிவகங்கைச் சீமைக்கு எதிராக கூடி மே மாதம் கொல்லங்குடியைக் கைப்பற்றியது.
1789ஆம் ஆண்டு மே மாதத்திற்கு மேல் காளையார் கோயிலும் கர்னல் ஸ்டூவர்டின் வசமானது.

அன்னாளில் ஆற்காட்டு நவாப்புக்கும், ஆங்கிலேயர்களுக்கும் பல கடிதத் தொடர்புகள் இருந்தன. அக்கடிதங்களின் வாயிலாக பல செய்திகளை நமக்கு இப்பொழுது தெரிந்தாலும் சில நல்ல விசயங்களை மாத்திரம் பார்ப்பது நன்றாக இருக்கும் . பலரை அவர்களின் வார்த்தைகளால் எல்லையில்லாமல் புகழ்ந்தும் இகழ்ந்தும் உள்ளனர். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

அந்நாளில் ஆற்காட்டு நவாப் முகமது அலி நிறைய ஆடம்பரத்தை விரும்பயிவராக இருந்துள்ளார். அதன் பொருட்டு கடனாளியாகி, கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்தார். கடைசியாக 1792ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி ஆற்காட்டு நவாப் தமிழகம் முழுவதையும் ஆங்கிலேயருக்கு முழு அதிகாரத்தோடு விட்டு கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் ஆங்கில ஆட்சியை தென் இந்தியப் பகுதியில் தடுத்து நிறுத்திய திப்புசுல்தான் 4-5-1799ஆம் நாள் ஆங்கிலேயர்களால் கொல்லப்படுகிறார். மருது பாண்டியருக்கு இந்நிகழ்ச்சி மிகவும் துன்பத்தை உண்டாக்குகிறது. அவர்களால்தான் வீரமுடனும், விவேகத்துடனும் மருது சகோதரர்கள் ஆட்சி செய்தனர். அன்னாளில் அவர்கள் கொடுத்து உதவிய ராணுவத் தளவாடங்கள் இன்றளவும் வரலாற்று ஆசிரியர்களால் பேசப்படுகிறது. அப்பொழுது ராக்கெட் வீசும் பயிற்சியை திப்பு சுல்தானிடம் இருந்து பெற்றதாகக் கூறுகின்றனர்.

தென்னாட்டின் கலெக்டராக இருந்த லூஷிங்டன் பல பாளையக்காரர்களை அடக்கினார். அடங்கிப் போனவர்களிடமிருந்து ஏராளமான பொருளை வசூல் செய்து தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டார். அதன் தென் பகுதியின் தலைமையிடமாக இராமநாதபுரம் பகுதி விளங்கியது. இந்த நிலையில் சிவகங்கைச் சீமை முறைப்படிக் கட்ட வேண்டிய கப்பத்தையும் சுணக்கமில்லாமல் ஆங்கிலேயருக்கு கட்டிக் கொண்டு வருகிறது. அப்படி இருந்தும் புதுக்கோட்டைத் தொண்டைமானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அடிக்கடி தொல்லைப்படுத்தும் ஆங்கிலேயரை இனியும் சிவகங்கைச் சீமையின் நலன்களை மனதில் கொண்டு ஆங்கிலேயர்களின் அடவாடித்தனத்தை விட்டு வைக்கக் கூடாது என மருது பாண்டியர்கள் எண்ணத் தொடங்கினார்கள்.

இராமநாதபுரம் சேதுபதி மற்றும் புதுக்கோட்டைத் தொண்டைமான் தன் பழைய பகை எண்ணங்களை உள்ளத்தில் வைத்துக் கொண்டு மருதுபாண்டியர்களுக்கு எதிராக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்.