மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 5

chinna maruthu and periya maruthu at kalaiyarkoil temple

இந்நிலையில் பவானி சங்கரத் தேவன் நாட்டைவிட்டு ஓடி தனது சொந்தமான தஞ்சை மன்னரிடம் சரணடைந்தார். மன்னர் பிரானே எனக்கு உதவி செய்து மறவர் நாட்டை எனக்கு மீண்டும் கிடைக்கும்படி நீங்கள் செய்துவிட்டால் பாம்பாற்றிற்கு வடக்கே உள்ள பகுதிகளை எல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன் என்றார் பவானி சங்கரன். பவானி சங்கரனுக்கு ஆதரவாகத் தஞ்சையின் படைகள். தண்டத்தேவனுக்கு ஆதரவாக மதுரையின் படைகளும், புதுக்கோட்டை படைகளும் களத்தில் சந்தித்தன. தஞ்சை படைத் தளபதி புதுக்கோட்டைத் தொண்டைமானின் இரண்டு மக்களையும் கைது செய்தார். தஞ்சை தளபதியுடன் உடன்பாடு செய்து கொண்டு சண்டையிலிருந்து விலகினார் புதுக்கோட்டை மன்னர். இறுதியில் தஞ்சைப் படை தண்டத்தேவனின் படையையும், மதுரைப் படையையும் எளிதாகத் தோற்கடித்தது. தண்டத்தேவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

பவானி சங்கரத்தேவன் மீண்டும் மறவர் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது மறவர் நாட்டைச் சேர்ந்த பகுதிக்கும் தலைவராக இருந்தார். இந்தச் சமயத்தில் தான் சிவகங்கைக்கு அருகாமையில் உள்ள நாலுகோட்டை பாளையத்தில் சொந்தக்காரர் சசிவர்ணத்தேவர் மிகச் சிறந்த வீரர் என்ற பெயர் பெற்றிருந்தார். இவர் மறவர் நாட்டின் மன்னராக பவானி சங்கரத்தேவர் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததினால் இவரது செல்வாக்கு, செல்வம், வீரம் இவைகள் மீது பொறாமை கொண்ட பவானி சங்கரத்தேவன் சசிவர்ணத் தேவரின் உடைமைகளைப் பறித்து மறவர் சீமையை விட்டுவிரட்டினார். சசிவர்ணத் தேவர் தஞ்சை அரண்மனைக்குச் சென்றார். தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் அரசப் பிரதானிகளின் முன்பாக தனது வீரதீரங்களைக் காட்டினார். பல வீரர்களை வெற்றி கொண்டார். சசிவர்ணத்தேவர் புலியோடு சண்டையிடுவதைப் பார்த்த தஞ்சை மன்னரின் நெருங்கிய உறவினர்கள்கூடப் பயத்தில் அலறினார்கள். தஞ்சை மன்னரின் நெருக்கம் சசிவர்ணத்தேவருக்கு வீரத்தின் பரிசாக கிடைத்தது. ஒரு சமயம் தஞ்சாவூர் மன்னரைக் கொல்ல அவரது எதிரிகள் திட்டம் போட்டனர். மன்னரை எப்படிக் கொல்வது என்று பலவாறு ஆலோசித்து மன்னரின் எதிரிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.

மூர்க்கமான காளை ஒன்றினை ஆரம்ப காலம் தொட்டே மன்னரின் உடையில் வீசும் வியர்வை வாடையைப் பிடிக்கச் செய்து வெறி கொள்ள வைத்து வளர்த்தனர். சமயம் பார்த்து மன்னர் மீது அந்தக் கொலை வெறிக் காளையை ஏவிவிட்டனர். சசிவர்ணத் தேவருக்கு அவர்களின் துர்குணம் எப்படியோ தெரிந்தது. காளையின் முன்னே பாய்ந்து அதன் வலிமை மிக்க கொம்புகளை உடைத்து அந்த முரட்டு காளையை அடக்கி மன்னனின் உயிரைக் காப்பாற்றினார். இந்த நிகழ்ச்சியால் தஞ்சை மன்னர் மனதில் சசிவர்ணர் நீங்கா இடம் பெற்றார். தஞ்சையில் ஏற்கனவே மறவர் சீமையைச் சேர்ந்த ஒருவர் அடைக்கலமாகி இருப்பதால் அவர் விஜய இரகுநாத சேதுபதியின் நெருங்கிய உறவினர் தட்டையத் தேவர் ஆவார். தட்டையத்தேவரும், சசிவர்ணத்தேவரும் பவானி சங்கரத்தேவரால் பல துன்பத்திற்கு ஆளானவர்கள். இவர்களின் பொது எதிரியாக பவானி சங்கரத் தேவர் கருதப்பட்டார். தஞ்சை மன்னருக்கு பவானி சங்கரத் தேவ சேதுபதி மீது ஏராளமான கோபம் இருந்தது. 'பாம்பாற்றில் வடக்கே உள்ள பகுதிகளைத் தருகின்றேன் என்று வாக்குறுதியை பவானி சங்கரத்தேவ சேதுபதி நிறைவேற்றாதது” தஞ்சை மன்னனுக்குப் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. தட்டையத் தேவரிடமும், சசிவர்ணத் தேவரிடமும் சரியான முறையில் ஒப்பந்தங்களை எழுதி வாங்கிக் கொண்ட தஞ்சாவூர் படை பவானி சங்கரத்தேவ சேதுபதியின் படைகளை ஓரியூரில் எதிர்கொண்டது. தோல்வி அடைந்த பவானி சங்கரத்தேவர் சேதுபதி சிறையில் அடைக்கப்பட்டார். ஒப்பந்தப்படி தஞ்சை மன்னர் பாம்பாற்றின் வடக்கே பரவிக் கிடந்த பெரும் நிலப் பகுதிகளைத் தஞ்சை தரணியுடன் சேர்த்துக் கொண்டார். தான் எடுத்துக் கொண்ட பாம்பாற்றின் வடபகுதி போக எஞ்சியவற்றை ஐந்து பகுதிகளாகப் பிரித்தார் தஞ்சை மன்னர்.

ஐந்து பகுதிகளில் மூன்று பகுதிகளை தட்டையத் தேவர் எடுத்துக் கொண்டார். இவர்தான் குமாரமுத்து விஜயரகுநாதர் ஆவார். மீதி இருந்த இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவர் எடுத்துக் கொண்டார். இவருக்கு நாலுக்கோட்டை உடையத்தேவர் என்ற பெயரும் உண்டு. நாலுக்கோட்டை உடையத்தேவர் ஆண்ட பகுதிதான் சிவகங்கை சீமை என்றழைக்கப்பட்டது. சசிவர்ணத் தேவர் என்ற நாலுக்கோட்டை உடையத்தேவர் சிவகங்கை சீமைக்கு ராஜமுத்து விஜயரகுநாத பெரிய உடையத்தேவர் என்ற பெயரில் அரசரானார். சசிவர்ணத் தேவரின் தந்தையார் பெயர் கண்டுமேச்சி பெரிய உடையத்தேவர். இராமநாதபுரத்தின் சேதுபதி விஜய இரகுநாத சேதுபதியின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை மணந்து கொண்டவர் சசிவர்ணத் தேவர். தன் மனைவி வழியாக வந்த சீதனங்களுக்கு எல்லாம் சசிவர்ணத்தேவர் உரிமையாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.1730ஆம் ஆண்டில் தான் சிவகங்கை சீமை உருவாயிற்று. இதற்கு 'சின்ன வாடகை” என்றும் சிறிய மறவர் நாடு என்றும் பெயர் விளங்கப் பெற்றது. தட்டையத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாதர் ஆண்ட இராமநாதபுரம் பகுதிக்குப் 'பெரிய வாடகை” என்றும் பெரிய மறவர் நாடு என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. இதற்கு முன்னால் சிவகங்கை எப்படி உதயமானது என்று, இனிமேல் சிவகங்கைச் சீமையைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

மருது சகோதரர்களின் இளமைக் காலம்

தமிழகத்தில் உள்ள சமூக கல்வி நிலைகளில் பிற்பட்ட வகுப்பினர்களில் 'அகம்படிய” குலத்தினரும் ஆவர். இந்த சமூகத்தினர், தமிழகத்தில் பரவலாக இருக்கின்றனர். குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். இந்த சமூகத்தைச் சேர்ந்த மொக்கைப் பழனி சேர்வைக்காரர் வீர மக்கள்தான் மருது சகோதரர்கள். சிவகங்கைச் சீமை அரசியலில் சூன்யம் ஏற்பட்டு, குழப்பமும் கொடுங்கோன்மையும் நிலவிய பொழுது, மக்கள் தலைவர்களாக மாறி துணிச்சலுடனும், தீரத்துடனும் போராடி, சீமையின் மானத்தைக் காத்தவர்கள். அவர்கள் இருவரும் பேராற்றலும் போர்த்திறனும் மிகுந்தவர்களாக விளங்கினர். இராமநாதபுரம் சீமையின் மேற்கே உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற சிற்றூரில் பிறந்த இந்த சகோதரர்களின் தந்தையார் மொக்கைப் பழனி சேர்வைக்காரர், அன்னையின் பெயர் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள். சிவகங்கையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் மேலூர் சாலையில் உள்ள புதுப்பட்டி இவரது ஊராகும். அவரது தந்தையார் மொக்கைப் பழனி சேர்வைக்காரரும் தாயாரும் இராமநாதபுரத்தில் குடியேறினர். பழனி சேர்வைக்காரர் இராமநாதபுரத்தை ஆண்டு கொண்டு இருந்த செல்லமுத்து சேதுபதி (1749-62)யிடம் தளபதியாக பணிபுரிந்து வந்தார். பழனியப்பர் இராமநாதபுரத்தில் பணியாற்றியதால் இப்போது கொங்காதெரு என வழங்கும் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். மருதுபாண்டியர்கள் பிறந்த இல்லம் அவர் வழியினர் பெயரால் 'முத்துக்கருப்பன் சேர்வை வீடு” என்று இன்றும் அழைக்கப்படுகிறது. பழனி சேர்வைக்காரர் இராமநாதபுரம் மன்னரது அரசுப் பணியில் இருந்த காரணத்தினால் இம்மக்களும் போர் புரிபவர்களைப் போன்று படைப்பயிற்சி பெற ஏற்பாடு செய்தனர். காரணம் அன்னாளில் இராமநாதபுரம் மன்னரது பிரதானியாக சிறந்து விளங்கிய வயிரவன் சேர்வைக்காரர் அவர் மருமகன் வௌ;ளையன் சேர்வைக்காரரைப் போன்று தம் மக்களும் அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக வரவேண்டும் என ஆசைப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள அகம்படியார் சமூகத்தில் வெ ள்ளையன் சேர்வைக்காரர் போன்ற சிறந்த இராஜதந்திரியும், தளகர்த்தரும் இதுவரை தோன்றவே இல்லை என்று சொல்லலாம். கி.பி. 1746-62 வரை சேதுபதி மன்னரது பிரதானியாக இருந்தவர். திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் அனைவரும், மறவர்களும், நாயக்கர்களும் பயந்து நடுங்கும் வகையில் வெ ள்ளையன் சேர்வைக்காரர் போர்த்திறன் பெற்றிருந்தார். கி.பி. 1752ல் மைசூர் அரசரது எடுபிடியாக மதுரை கோட்டையைப் பிடிக்க வந்த வெ ள்ளைத் தளபதி கோப்புடன் வாள் போரிட்டு அவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதுடன் மதுரை அரியணைக்கு உரிய வாரிசும், மறைந்த மதுரை நாயக்க மன்னர் மரபினருமான விஜய குமார பங்காரு திருமலை நாயக்கருக்கு சேதுபதி மன்னர் விருப்பப்படி மதுரை மன்னராக முடிசூட்டி வைத்து மகிழ்ந்தனர். அவர்கள் மாமனார் வயிரவன் சேர்வைக்கார் மறவர் சீமையின் சிறந்த தளபதியாக விளங்கியதுடன் வாதாபி போருக்கு பின்னர் தம்மை ஆன்மீக வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டு கோவில் திருப்பணி பல செய்தவர்.

அவர் கட்டியதாக இராமநாதபுரம் அருகில் உள்ள பெருவயல் கிராமத்தில் உள்ள சண்முநாதர் கோவிலில் பெரிய வேல் உள்ளது. அதன் உயரம் 5.5 அடி. வேலுக்குள் முருகன் இருப்பது இதில்தான். கிருபானந்தவாரியார் அவர்கள் 1-10-1979ம் தேதியில் வந்து இக்கோவில் சிறப்பை எடுத்துரைப்பதாக புகைப்படம் உள்ளது. அவரின் மருமகன் வெ ள்ளையர் சேர்வையும் பல தான தருமங்கள் செய்து உள்ளார். திருப்புல்லாணியில் ஒரு சத்திரம் நிறுவியுள்ளார். அதில் தற்பொழுது காவல் நிலையம் இயங்கி கொண்டு உள்ளது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் ஆலயத்தில் 10 நாள் விசேஷ காலத்தில் 6ம் நாள் மண்டகப்படி வெ ள்ளையன் சேர்வை நினைவாக இன்னும் நடைபெறுகிறது. இந்த இரண்டு சேர்வைக்காரர்களைப் பற்றி குறிப்பிடுவதற்கு காரணம் மருதுபாண்டியரின் தந்தையார் அவர்கள் இருவருடனும் மிகுந்த பாசத்துடனும், நன்றியுடனும் அவரின் படையில் பணியாற்றியது மட்டுமின்றி அவரின் பெயரில் ஞாபகமாக தனது மூத்த மகனுக்கு வெ ள்ளை மருது என பெயர் சூட்டினார் என வரலாற்று ஆசரியர் கூறுகின்றனர். பெரிய மருதுபாண்டியர் பிறந்த ஆண்டு 1748 என்று டாக்டர் ந. சஞ்சீவி தெரிவித்துள்ளார். சின்னப் பாண்டியர் அவருக்கு ஐந்து வருடம் கழித்து பிறந்ததாக சொல்கிறார்.

இந்த காலகட்டத்தில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதைப் போல மருதுவின் தீரச்செயல்கள் வெளிப்பட்டது பற்றி சிறிய செவிவழிச் செய்தி. அப்போது வெள்ளை மருதுவுக்கு 12 வயதும், சின்ன மருதுவுக்கு 7 வயதும் இருக்கும். திருமலை சேதுபதி காலம் முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழா வந்தது. சிறுவர்களை தளபதி பழனியப்பன் விழாக் காண அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். விழாக் காலத்தில் மட்டும் சேதுபதிகளின் ஆயுத சாலை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். கம்பிகளுக்கு பின்னே எண்ணெய் போட்டு பளபளப்பாகப்பட்ட ஆயுதங்கள் ஆயுத சாலையின் ஒவ்வொரு அறையிலும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாமும் எப்போது இவற்றைத் தொட்டு கையாளலாம் என்ற உந்துதலில் தந்தையை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். மருதிருவர் ஆயுத சாலையை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து வீட்டில் தோசைக்கரண்டியை வாளாக எண்ணியும் இட்லித் தட்டை கேடயமாகக் கருதியும்

அவற்றை எடுத்துக் கொண்டு மருதிருவர் சண்டை போடத் தொடங்கினர். தொல்லை பொறுக்க முடியாத தாய் இவர்களை அழைத்துச் செல்லுமாறு தளபதியாரிடம் சொன்னார். வெளியூர் போய்விட்டு வந்து இவர்களுக்கு வழிபண்ணுகிறேன் என்று பழனியப்பர் போய்விட்டார். தந்தை ஊரில் இல்லை என்றதும் காலையில் வெளியேறுகிற சிறுவர்கள் மாலையில்தான் வீடு திரும்பினர். மாலை மங்கி இரவு ஆனதும் அரண்மனைக்குள் சிறுவர்கள் புகுந்துவிடுவர். அரண்மனை முகப்பில் பெரிய இரும்புக் கதவுகள் இருந்தன. இந்த இரும்புக் கதவுகளை தாழ் போடுவதில்லை. தாழ் போடவும் எளிதில் முடியாது. அக்கதவை மூட ஒரு பெரிய பீரங்கியை குறுக்காக உருட்டி வந்து வைத்துவிடுவர். பல வீரர்கள் சேர்ந்துதான் பீரங்கியை உருட்டிவிடுவர். அரண்மனை உள்ளே நுழைந்த சிறுவர்கள் இரவு ஆனதும் காவல்காரர்கள் வைத்திருந்த பீரங்கியை நகர்த்தி முன்பிருந்த இடத்தில் வைத்துவிட கதவு திறந்து கொண்டது. விடிந்த பின் காவலர் திடுக்கிட்டனர். தனி ஒருவனாக நகர்த்த முடியாத பீரங்கியை யார் நகர்த்தினர் என்பது மர்மமாகவே இருந்தது. அவர்களும் அடுத்த நாளும் இதுமாதிரியே நடக்க மிகவும் திகைப்படைந்துவிட்டனர். எப்படியும் கண்டுபிடிப்பது என மூன்றாம் நாள் விழித்திருந்தனர். நடுச்சாமத்து மணியடித்ததும் இலேசாக பீரங்கி நகர்கிற கிறீச், கிறீச் எனும் ஒலி கேட்கவும் காவலர்கள் வந்து சிறுவர்களை பிடித்துக்கொண்டனர்.

வெளிச்சத்தில் இழுத்து வந்து பார்த்தனர். 'அடடே! இவர்கள் நம் தளபதி பழனியப்பரின் பிள்ளைங்க. என்னடா இது? நாம 4, 5 பேர் சேர்ந்து உருட்டி வருகிற பீரங்கியை இந்த இரண்டு சிறுவர்கள் சாதாரணமாக உருட்டி வந்திருக்கிறார்களே! இவர்கள் என்ன சிறுவர்களா அல்லது சிறுத்தைகளா? என்று வியந்து போய் சிறுவர்களை வீட்டில் கொண்டுபோய்விட்டு விபரம் சொல்லிவிட்டு தளபதி வரட்டும் என காத்திருந்தனர். ஆனால் தளபதி வருவது தாமதமானது இனியும் தாமதமானால் ஒரு வேளை அரசருக்கு தெரிந்தால் நம் வேலைக்கு ஆபத்து என கருதிய காவல்காரர்கள் சேதுபதி மன்னரிடம் நடந்ததை சொல்லி மன்னிப்பு கோரினர். சேதுபதி சிறுவர்களை அழைத்துவரச் சொன்னார். அவர்களை நேரில் கண்டதும் மன்னரால் வியப்பை அடக்க முடியவில்லை. உள்ளபடியே அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்கள் என்று முடிவு செய்து கொண்டு அவர்களை பழனியப்பர் வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று இருவரையும் வீட்டுக்குப் போக சொல்லிவிட்டார். வெளியூரிலிருந்து திரும்பியதும் தளபதி பழனியப்பர் விபரம் அறிந்தார்.

ஒரு பக்கம் தம் மைந்தர்களைப் பற்றிப் பெருமையாக எண்ணினாலும் தங்கள் கைவரிசையை அரண்மனைக்குள்ளேயே காட்டிவிட்டார்களே. மன்னர் சீறினால் என்னாவது? என்று அசந்து போய் நின்றார். சேதுபதி மன்னரிடம் இருந்து உள்ளேவர அனுமதி கிடைத்ததும் பழனியப்பர் விரைந்து மன்னரிடம் சென்றார். 'தளபதியாரே! உங்கள் மைந்தர்கள் அதிசய சூரர்கள். சூரர்களுக்கு வேலை இங்கல்ல. சூரன் கோட்டையில் தான். அவர்கள் இருவரும் சூரன் கோட்டையில் உள்ள நமது படைவீரர் பயிற்சிச் சாலையில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி பெறட்டும் என்று அன்புக் கட்டளையிட்டார் அரசர். சூரன் கோட்டை ஆம் சூரர்கள் கோட்டைதான்.

இக்கோட்டையைப் பற்றி நம் நாட்டு வரலாற்றிலக்கியம் தானே கோட்டை பற்றிக் கூறுகிது என்று அலட்சியமாய் எண்ணிவிட வேண்டாம். அந்நிய நாட்டவரான மக்ளீன் என்பவரின் சென்னை மேனுவெலில் சொல்லப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் இரகுநாதக்கிழவன் சேதுபதி (1673-1708) சூரன் கோட்டையைக் கட்டியிருந்தார். கோட்டையும் அரண்மனையும் அடங்கிய சூரன்கோட்டை ஒரு மைல் மேற்கே அமைந்திருந்ததில் மிச்சப் பகுதியே இப்பொழுது உள்ளது. கொத்தளத்தில் உயரம் 34 அடி இராமநாதபுரம் நகரைச் சுற்றி கோட்டையாக இருந்து காலப் போக்கில் எல்லாம் அழிந்து எச்சமாக இன்று விளங்குவன மூலக் கொத்தளத்தில் ஒரு மூலைப் பகுதியும். இராமநாதபுரம் நகரின் காவல் தெய்வமாக உள்ளது. கூரிச்சாத்த ஐயனார் கோவிலும், வனசங்கரி அம்மன் கோவிலும் அக்காலத்தில் நகருக்கு வரும் நபர்கள் இவ்விரு தெய்வங்களையும் வணங்கித் தான் மேற்கில் இருந்து வரவேண்டும். அதுபோல் நகரின் மையப் பகுதியில் உள்ள கோட்டை வாசல் பிள்ளையார் கோவிலும் கோட்டையின் கிழக்கு வாயில் தெய்வமாக இருந்தது. அதன் பக்கத்தில்தான் எங்களது மூதாதையர்கள் தெய்வமான ஸ்ரீகோட்டைமாகாளியம்மன் கோயில் பவுண்டுகடைத் தெருவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகம் 3-2-2006 அன்று நடைபெற்றது. இக்கோவிலை திருப்பணி செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததினால்தான் இந்த புத்தகத்தை எழுதுவதற்கும் எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்து கோட்டையின் சிறப்புகளை சொன்னால் இந்த புத்தகம் போதாது. இக்கோட்டை இடுபாடுகளில் சிறியவனாக நான் இருக்கும் பொழுது, ஓடிப்பிடித்து விளையாடி உள்ளோம். அந்த நினைவுகள் எல்லாம் இனி வராது.