மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 3

maruthupandiyar sivagangai 1800 history in tamil தளவாய் சேதுபதியை மீண்டும் மறவர் சீமைக்கு தம்பித் தேவருக்குப் பதில் சேதுபதி மன்னர் என மன்னர் திருமலை நாயக்கர் அறிவித்தார். இது காலத்தின் மாற்றம் தான். தளவாய் சேதுபதி மாட்சிமை மிக்க மன்னராக மீண்டும் இராமநாதபுரம் நகருக்குள் நுழைந்தார். அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். கி.பி. 1646ஆம் ஆண்டு தளவாய் சேதுபதி தம்பித் தேவரால் படுகொலை செய்யப்பட்டார். மறவர் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை முடிவிற்குக் கொண்டுவர நினைத்தார் திருமலை நாயக்கர் மன்னர். கி.பி. 1646ஆம் ஆண்டில் மறவர் நாடு மூன்றாக பிரிக்கப்பட்டது. கீழ்க்கண்டவாறு திருமலை நாயக்க மன்னர் பிரித்தார்.

இரகுநாதத் தேவருக்கு - இராமநாதபுரம் பகுதி, தம்பி தேவருக்கு - சிவகங்கைப் பகுதி, தணக்கத் தேவர், நாராயணத் தேவர் ஆகிய இருவருக்குமாக - திருவாடனைப் பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. கி.பி. 1647ஆம் ஆண்டு இராமநாதபுரம் பகுதியை ஆளவந்த இரகுநாத சேதுபதி அதிர்ஷ்டமுள்ளவராகவும், சிறந்த ஆட்சித் திறமை உடையவராகவும் இருந்தார். இரகுநாத சேதுபதி என்ற திருமலை சேதுபதியின் புகழ் மறவர் நாட்டையும் தாண்டி எல்லைகளை எல்லாம் கடந்து பரவிடும் காலம் என்று அவரைத் தேடிவந்து நின்றது. மறவர் சீமை பிரிவதற்குக் காரணமாக இருந்த தணக்கத்தேவர் மற்றும் தம்பித்தேவர் ஆகியோர் இறைவனடியில் சேர்ந்தனர். இதன் விளைவாக மறுபடியும் இரகுநாத சேதுபதியின் கீழ் மறவர் சீமை ஒன்றுபட்டது. 1659ஆம் ஆண்டு மைசூர்ப்படை மதுரை நகரைத் தாக்கியது. அந்தப் பயங்கரத் தாக்குதலை கண்ட திருமலை நாயக்கரால் எதிர்கொள்ள முடியவில்லை. உடனே இராமநாதபுரம் உதவியை மன்னர் திருமலை நாயக்கர் நாடினார்.

ஒரே நாளில் இருபத்தைந்தாயிரம் படை வீரர்கள் உடன் மதுரைக்குச் சென்று மைசூர் படையை ஓட ஓட விரட்டி அடித்தனர். திருமலை நாயக்கர் திகைத்துப் போனார். இரகுநாத சேதுபதியின் உதவியை நினைத்து பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். அதன் பயனாக 'தாலிக்கு வேலி” என்ற பட்டத்தைக் கொடுத்து இரகுநாத சேதுபதியை பெருமைப்படுத்தினார். அத்தோடு மறவர் சீமையை ஆளுவதால் 'முன்னோர் வழக்கப்படி மறவர் சீமையை ஆண்டுவந்த சேதுபதிகள் தவறாது செலுத்தி வந்த கப்பத் தொகையை இனி இரகுநாத சேதுபதி செலுத்த வேண்டாம் என்று கட்டளையிட்டார். திருப்புவனம், திருச்சுழி, பள்ளிமடம் ஆகிய பகுதிகளை திருமலை நாயக்ர் மனமுவந்து இரகுநாத சேதுபதிக்குக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தான் மட்டும் பரம்பரையாகக் கொண்டாடி மகிழும் மதுரைக்கே அக்காலத்தில் பெருமை சேர்த்த நவராத்திரி விழாவை இரகுநாத சேதுபதியும், இராமநாதபுரத்தில் தனக்கு இணையாகக் கொண்டாடி மகிழும் உரிமையைத் தந்தார். அந்த விழா இன்றும் இராமநாதபுரத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சிறிது காலம் கழித்து மதுரை மீது முற்றுகையிட வந்த யூசுப்கானையும் இரகுநாத சேதுபதி பெரும் படையுடன் விரட்டி அடித்து திருமலை நாயக்கருக்கு உதவி செய்தார். தனது காலத்தில் மறவர் சீமையை வளப்படுத்திய பலப்படுத்திய புகழ் ஒளி நிறைந்த வீரத்திருமகன் இரகுநாதசேதுபதி அவர்கள் 1672ஆம் ஆண்டில் மறைந்தார்.

இரகுநாத சேதுபதிக்குப் பிறகு பட்டமேற்ற இராசசூய சேதுபதி ஆறு மாதத்தில் கொல்லப்பட்டார். இராசசூய சேதுபதிக்கு பிறகு பட்டத்திற்கு வந்த அவரது தம்பி ஆதன இரகுநாத சேதுபதி மூன்று மாதங்களில் ஆட்சியை முடித்துக் கொண்டார். இராசசூய சேதுபதி மற்றும் ஆதன சேதுபதி ஆகியோருக்கு குழந்தை இல்லாததினால் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆன கிழவன் சேதுபதி என்றழைக்கப்பட்ட இரகுநாததேவர் 1674ஆம் ஆண்டில் மறவர் சீமையின் ஒப்பற்ற சேதுபதி ஆனார். கிழவன் சேதுபதி மறவர் சீமையின் வரலாற்றில் கரும்பு நெஞ்சம் கொண்டவர். இவர் ஆட்சி செய்த காலம் முழுவதும் எதிர்ப்பே இல்லாத உயர்ந்த நிலையில் விளங்கிய காலமாகும்.