சிவகங்கைச் சீமையில் எல்லைகளைக் கவியரசு கண்ணதாசன் பின்வருமாறு பாடலாக இயற்றியுள்ளார். தென்பாண்டி நாட்டினிலே சேதுபதி பூமியிலே..! பொன் பூத்த சீமை இது! புகழ்பாடும் சீமை இது! தெக்கூரும், ஒக்கூரும், சிறுவயலும் பூங்குடியும் .., திருப்பத்தூர் நரிக்குடியும் திருமயமும் முக்குலமும்.., நாலுகோட்டை நாடும் நாட்டரசன் கோட்டையதும்.., சேர்ந்து பெருமை தரும் சிவகங்கைச் சீமை இது..!
சிவகங்கைச் சீமையின் தலைசிறந்த மன்னராக பொறுப்பேற்ற சசிவர்ணத்தேவருக்குப் பின்பு அவர் மன்னன் முத்துவடுகநாத பெரிய உடையத்தேவர் பட்டத்துக்கு வந்தார். அவர் 22 ஆண்டுகள் (1750-72) வரை ஆட்சி செய்தார். அவரது மனைவி பட்டத்தரசி வேலு நாச்சியர் ஆவார். அவரின் இளைய மனைவி பெயர் கௌரி நாச்சியார். சிவகங்கை அரசர் முத்துவடுகநாத பெரிய உடைத்தேவர் வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். அவர் அடிக்கடி காட்டிற்கு வேட்டையாடச் செல்வார். அச்சமயங்களிலெல்லாம் பெரியமருதுவையும், சின்ன மருதுவையும் தவறாது காட்டிற்கு அழைத்துச் செல்வார். ஒரு சமயம் முத்துவடுகநாதர் வேட்டையாடச் சென்றார். அவருடன் பெரிய மருதுவும் சின்ன மருதுவும் துணையாகச் சென்றிருந்தார். முத்துவடுகர் கரடி, புலி முதலிய கொடிய மிருகங்களை வேட்டையாடிக் கொன்று குவித்தார். அச்சமயத்தில் வேங்கைப் புலியொன்று அவர் மீது சீறிப் பாய்ந்தது. அதனிடம் சிக்கி அரசர் உயிர் இழக்கப் போகிறார் என்று எல்லோரும் பயந்து செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தனர். வேங்கைப்புலி வெகுண்டு வருவதைப் பெரிய மருதுவும், சின்ன மருதுவும் நோக்கினர். உடனே ஒருவர் அந்த அரசருக்கு முன்னே வந்து நின்றார். மற்றவர் பக்கத்தில் வைத்திருந்த வேலை வாங்கி அவ்வேங்கைப் புலியின் மேல் வீசினார். அவ்வேல் வந்து தாக்கியதும், வேங்கை சீற்றமெடுத்து மீண்டும் சீறிப்பாய்ந்தது. அரசருக்கு முன்னே இருந்தவர் அவ்வேங்கையை மறிக்க முயன்றார். எனினும் வேங்கை அரசர் மீது பாய்ந்துவிட்டது.
உடனே மற்றொருவர் ஓடிவந்து வேங்கைப் புலியைக் குத்திக் கொன்றார். அதனால் முத்துவடுகநார் உயிர் தப்பினார். அதுகண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருவருக்கும் பல பரிசுகள் வழங்கிப் பதவி உயர்வும் கொடுத்தார். மருது சகோதரர்கள் இருவரும் அந்நாள் முதல் சேணையின் தளகர்த்தர்கள் ஆயினர். அதன் பின்னர் சிசகங்கையின் சேணை சிறந்து விளங்கியது. இவர்களின் வீரத்தைப் பின்னாளில் இவர்களுடன் நெருக்கமாகப் பழகி மகிழும் வாய்ப்பை பெற்ற வெள்ளைத் தளபதி ஜேம்ஸ் வேல்ஷ் அவர்களது வீர வாழ்வை தமது நாட்குறிப்புகளில் இவ்விதம் சித்தரித்து வரைந்துள்ளார். அவர் எழுதிய வார்த்தைகள் தான் மருது சகோதரர்களின்; வீரத்தை உண்மையிலேயே நாம் நேரில் காண்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. அவர் சொன்ன நல்விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோமே. மருது சேர்வைக்காரர்கள் என்று அடிக்கடி குறிப்பிடப்படுவர்களில் மூத்தவர் வெ ள்ளை மருது. இவருக்கு நிர்வாகத்தைப் பற்றி எந்தவித சிந்தனையும் கிடையாது. வேட்டைப்பிரியர். தமது பெரும்பாலான பொழுதை வேட்டையாடுவதிலும், துப்பாக்கி சுடுவதிலும் கழித்து வருகிறார். காடுகளில் உள்ள வேங்கை, சிறுத்தை போன்ற மிருகங்களுடன் போராடுவதில் அவருக்கு பெருவிருப்பு இருந்தது. அசாதாரண மனிதனாக விளங்கிய அவர், தமது கைவிரல்களுக்கிடையில் அக்காலத்தில் மிகக்கடினமான ஆற்காட்டு நவாப்பின் ரூபாய் நாயணத்தை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து வளைத்து ஒடித்துவிடுவார். தஞ்சை, திருச்சி, மதுரையில் தங்கி இருந்த பரங்கியருடன் தொடர்புகொண்டு அவர்களைப் போய் பார்த்து பழகி வந்தார். அவர்களும் இவரிடம் பெருமதிப்பு வைத்து இருந்தனர். விரும்பினால் உடனே அவர்கள் வெ ள்ளை மருதுவிற்குத் தான் தகவல் அனுப்புவார்கள். அவரும் அதற்கான ஆயத்தங்களை செய்து, காட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர்களுக்குத் தகுந்த தற்காப்பும் அளிப்பார். அவரைச் சுற்றிப் பல ஈட்டிக்காரர்கள் இருந்தாலும், புலி, சிறுத்தை போன்ற கொடிய மிருகம் வந்தால் அதனை முதலில் சந்தித்து வீழ்த்துவது அவர்தான்....
சின்னமருருதுவை அவர் குறிப்பிடுவது - அந்தப் பரந்த வளமான சீமையின் அரசராக இருந்தவர் சின்ன மருது. பெரும்பாலும் அவர் சிறுவயலில் வசித்து வந்தார். அவர் கறுப்பாக இருந்தாலும் அவரது எண்ணத்தில் இதயத்தில் மாசு இல்லாதவாராக இருந்தார். அழகாகவும், அன்புடனும் பழகும் பண்பாளராகவும் இருந்தார். அவரது தலையசைவைக் கட்டளையாகக் கொள்ளும் அந்த சீமை மக்கள் அவரை எளிதில் கண்டு பேசி தங்களது தேவைகளைத் தெரிவிக்கக் கூடிய வகையில் காவல் இல்லாத மாளிகையொன்றில் வாழ்ந்து இருந்தார். கி.பி. 1795 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் அவரைப் போய் சந்திக்கச் சென்ற பொழுது அங்கு வந்திருந்த மக்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியுற்றதை நேரில் பார்த்தேன். அதன் பின்னர் நானும் அவரும் நண்பர்களானோம். நான் மதுரையில் இருக்கும் வரை அவர் எனக்கு அன்பளிப்புக்களாக உயர்ந்த ரக அரிசி, பழங்கள் ஆகியவைகளை அனுப்புவதற்குத் தவறுவதில்லை. குறிப்பாக தடித்த தோலும் மிகவும் இனிப்பு உள்ள பெரிய ஆரஞ்சுப் பழங்களை அனுப்பி வைப்பார். அந்த ரகப் பழங்களை இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் நான் பார்த்ததே இல்லை. அம்பு எறிவதற்கும் வாள் போர் செய்யவும், குறிப்பிட்ட தொலைவில் வளரித்தண்டு வீசித் தாக்குவதையும் எனக்கு கற்றுக் கொடுத்தவரே அவர் தான் என கர்னல் வேல்ஷின் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தப் பொதுப் பண்புகளைத் தவிர பெரிய மருது என்ற வெள்ளை மருதுவைவிட சின்ன மருதுவிடம் சில சிறப்பான பண்புகளும் இருந்தன. எதிரியின் இயல்புகளை - குறிப்பாக பலவீனங்களை விரைவாகப் புரிந்துகொள்ளுதல், அவைகளைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், அவைகளைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகியவைகளில் அவர் தனித்திறமை பெற்றிருந்தார். அத்துடன் தமக்கு நல்லது என்று நம்புவதை அதன் விளைவு கருதாது துணிந்து மேற்கொள்ளும் துணிச்சலும் அவருக்கு இருந்தது. அவரது நடவடிக்கையைக் கண்டு அவரது எதிரிகள் அச்சமும் பீதியும் அடைந்தனர். இந்த நாட்டு மக்களை மிகவும் இழிவாக எண்ணி இருந்த பரங்கியர்களுக்குக்கூட 'சின்ன மருது” என்றால் சற்று நிதானமாக நடக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்படுவது உண்டு. இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பாளரான கர்னல் மார்ட்டின்ஸ் என்ற பரங்கியர், 'சின்ன மருதுவின் வீர சாகசங்களில் மனத்தைப் பறிகெர்டுத்து அவரது நெருங்கிய நண்பராக இருந்தார். கர்னல் வெல்ஷ் சின்ன மருதுவிடம் வளரி, வாள், வேல் ஆகிய தமிழர்களது ஆயுதங்களைத் திறமையாகப் பயன்படுத்தும் அதன் நுணுக்கங்களை சின்னமருதுவிடம் கற்று அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டதாக அவரின் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளில் நமக்கு கிடைக்கும் ஆதாரம்.
Read Maruthupandiyar History in English...
Velu Nachiyar History in Tamil...
Sivagangai Palace photo gallery to view Read More ......
2008 - www.sivagangaiseemai.com
ALL Rights Reserved. Privacy Policy