வேலு நாச்சியாரின் வீர வரலாறு - Page 2

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

velu nachiyar photos ஒரு சமயம் வேலு நாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார், மருது சகோதரர்கள் முதலியோர் திண்டுக்கல் கோட்டையிலிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியைச் சந்தித்தனர். அவர், அவர்களை வரவேற்று உபசரித்தார். ராணியுடனிருந்த சின்னஞ்சிறு சிறுமி வெ ள்ளச்சி நாச்சியாரைக் கண்டு மனமிரங்கி அனுதாபம் கொண்டார். அச்சிறுமி மேல் பரிவும், பாசமும், கருணையும் கொண்டார். அவர்களது தாய் நாட்டுப் பற்றையும், வீரத்தையும் கண்டு வியந்து அவர் மகிழ்ச்சியுற்று அவர்களுக்கு உதவி செய்வதாக ஆறுதல் கூறினார். பிரதானியின் மறைவிற்குப் பின்னர், வேலுநாச்சியார் தான் நேரடியாக அரசியல் விவகாரங்களில் ஈடுபடத் தீர்மானித்தார். பிரதானி விட்டுச் சென்ற பணிகளை குறிப்பாக, சிவகங்கைச் சீமையின் நாட்டார்களுடன் கொண்ட ஓலைத் தொடர்புகளை, தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தமது கணவரிடம் மிகுந்த விசுவாசத்துடன் பணியாற்றிய மருது சகோதரர்களையும் இந்த அரசியல் பணியில் வேலுநாச்சியார் ஈடுபடுத்தினார். விருப்பாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமைத் தலைவர்களுக்கு அனுப்பிய ஓலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. சிவகங்கைச் சீமை மக்கள் பலர், சிறுசிறு குழுக்களாக ஆயுதங்களுடன் விருப்பாட்சி போய்ச் சேர்ந்தனர். அவர்கள் ராணி வேலுநாச்சியாரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சிலர் அங்கேயே ராணிக்குப் பாதுகாப்பாகத் தங்கவும் செய்தனர். எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

ராணி வேலு நாச்சியாரது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும், அழித்தொழிக்கும் அற்புதத் திட்டமொன்றினை உருவாக்கி அதைச் செயல்படுத்துவதற்கு ஹைதர் அலி ஆயத்தமானார். சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாபின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு உதவும் படைகளைத் திண்டுக்கல் கோட்டை வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஹைதர் அலி, ராணி வேலுநாச்சியாருக்கு செய்தி அனுப்பினார். விருப்பாட்சியிலிருந்து சிவகங்கைபுறப்படுவதைத்திண்டுக்கல் கோட்டை கிலேதார் சையது காகிற்கு உடனே ராணி தகவல் கொடுத்தார். குறிப்பிட்ட நாளன்று, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் வழிகாட்டுதலில் ஹைதர் அலி வழங்கிய குதிரைப் படைகள், சின்ன மறவர் சீமை சிவகங்கை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. ஆற்காடு நவாபின் படைகள் வழியில் பல்வேறு தடைகளை அமைத்தன. வேலு நாச்சியாரது குதிரைப் படைகள், அத்தடைகளைத் தகர்த்தெறிந்து, பெரும் தாக்குதலில் ஈடுபட்டன. மதுரைக்கருகில் 'கோச்சடை” என்னுமிடத்தில் கம்பெனிப் படைகளும், நவாபின் படைகளும் தடைகள் ஏற்படுத்தித் தாக்கின. வேலு நாச்சியாரது படைகள், நவாபின் படைகளைப் பாய்ந்து தாக்கித் தவிடுபொடியாக்கின. மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், கம்பெனி படைகளைத் தாக்கி அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற வேலு நாச்சியார், இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாரும் மருது சகோதரர்களும் சிவகங்கைக் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர்.மக்கள் கூட்டம் அவர்களை மகிழ்வுடன் வரவேற்று வாழ்த்தி வணங்கியது. 1780ம் ஆண்டு வேலுநாச்சியார், தனது மகள் வெ ள்ளச்சி நாச்சியாரை சிவகங்கைச் சீமையின் அரசியாக மகிவும் எளிமையான ஒரு விழாவில் முடிசூட்டி, அரியணையில் அமரச் செய்தார். பெரிய மருதுவைத்தளபதியாகவும் (தளவாய்) சின்ன மருதுவை முதலமைச்சராகவும் (பிரதானி) நியமனம் செய்து வேலுநாச்சியார் ஆணைகள் பிறப்பித்தார். இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாரின் பிரதிநிதியாக ராணி வேலுநாச்சியார் சிவகங்கைச் சிமையை 1780ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்தார். சீமையின் நிர்வாக இயக்கத்திற்கு பிரதானிகள் (மருது சகோதரர்கள்) உதவி வந்தனர். இளவரசி வெள்ளச்சி நாச்சியார் திருமணம் ஆகாத கன்னிகையாகவும், ராணி வேலுநாச்சியார் கணவரை இழந்த கைம்பெண்ணாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் அரசயில் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து பணிகளிலும் நேரடியாக ஈடுபட இயலாத நிலை, அத்துடன் அன்றைய சமுதாய அமைப்பில், இத்தகைய உயர்குலப் பெண்கள், தங்கள் தனிமை நிலையைத் தவிர்த்து பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவது விரும்பத் தகாததாகவும் இருந்தது. "பெண் உரிமை" என்ற விழிப்புணர்வுடன் பாரம்பரியமாக வந்த மரபுகள் மீறுவதையும் ஏற்று சகித்துக் கொள்ளாத சமூகநிலை இத்தகைய இறுக்கமான அகச்சூழலில் அரசியலை பிரதானிகள் மூலமாக அரசியார் சிறப்பாக நடத்தி வந்திருப்பது அருமையிலும் அருமை.” எனவே சிவகங்கைச்சீமை நிர்வாகத்தை மருது சகோதரர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வந்தனர்.

velu nachiyar stamp from tamilnadu government வேலுநாச்சியார் நாலுகோட்டை சசிவர்ணப் பெரிய உடையத்தேவர் குடும்ப வழியில் வந்த உறவினரான படமாத்தூர் கௌரி வல்லபத் தேவர் என்ற புத்திசாலி இளைஞனைத் தமது பாதுகாப்பில் வைததிருந்தார். படமாத்தூர் கௌரி வல்லபத் தேவரை சுவீகாரம் எடுத்து தனக்குப் பின்னர் தனது வாரிசாக அவருக்குப் பட்டம் சூட்ட வேலுநாச்சியார் விரும்பினார். அவருக்கு தனது மகள் இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்து, அவரை சிவகங்கை மன்னராக ஆக்கவும் ராணி முடிவு செய்திருந்தார். அதைஉணர்த்தும் வகையில் அரசு விழா ஒன்றில் அவரை அறிமுகப்படுத்தி வைப்பது என்று ராணி முடிவு செய்திருந்தார். அதன்படி காளையர் கோயில் ஆலயத்தில் படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருககு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. அவ்விழாவிற்கு நாட்டுத் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். சிறப்பான வழிபாடுகள் முடிந்த பின்னர் கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இருக்கையில் இளவரசர் கௌரி வல்லபத் தேவரை அமரச் செய்து, பிரதானிகளும் நாட்டுத் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்கினர். சில காலம் சென்ற பின்னர் சிவகங்கை பிரதானிகளுக்கு (மருது சகோதரர்களுக்கு) இளவரசர் கௌரி வல்லபத் தேவரை பிடிக்கவில்லை. வேலுநாச்சியார், தமது மகளை படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருக்குத் திருமணம் செய்து கொடுப்பது சம்பந்தமாய், இரு பிரதானிகளுடன் ஆலோசனை செய்தார். மருது சகோதரர்கள் அந்த திருமண சம்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தனர். கௌரிவல்லபத் தேவர் சிவகங்கைச் சீமைக்கு மருமகனாவதற்குத் தகுதி, திறமையில்லாதவரென்றும், முரட்டுத் தனமும், அரச குடும்பத்திற்குரிய தகுதிகள் இல்லாதவரென்றும், அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். மிகுந்த வேதனையால் ராணி மிகக் கவலையடைந்தார். இதற்கிடையில் ராணி கௌரி வல்லபத் தேவரை தனது வாரிசாகத் தத்தெடுப்பதையும் திருமண உறவின் மூலம் அதிகாரம் பெறுவதையும் மருது சகோதரர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் கௌரி வல்லபத் தேவரை காளையார் கோயில் ஆலயத்தில், தக்க பாதுகாப்பில் சிறைவைத்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். இந்தச் செய்தி ராணியாருக்குக் கிடைத்ததும், மருது சகோதரர்களிடம் இதுபற்றிக் கேட்டார். கௌரி வல்லபத் தேவர் சிறையில் வைக்கப்படவில்லையென்றும், அவர் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றி இராமநாதபுரம - சிவகங்கைகொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட 'சேது நாடு” ஒன்றை உருவாக்க இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னருடன் ஓலைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைக்காக அவரைக்காளையார் கோயில் ஆலயத்தில் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி ராணியைச் சமாதானப்படுத்தினர்.