மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 4

chinna maruthu and periya maruthu at kalaiyarkoil temple

புதுக்கோட்டையை ஆண்ட பல்லவராயர் கிழவன் சேதுபதிக்கு முரணாகத் தஞ்சை மன்னனுடன் நேசம் கொண்டிருந்ததால் இதைத் தெரிந்து கொண்ட கிழவன் சேதுபதி பல்லவராயனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது கள்ளர் இன மனைவி 'கதலி” என்பவளின் சகோதரனாகிய இரகுநாதத் தொண்டைமானை அரசன் ஆக்கினார். இப்படித்தான் புதுக்கோட்டையில் தொண்டைமான் அரசு உதயமாயிற்று. கிழவன் சேதுபதி முப்பத்தாறு ஆண்டுகளாக மறவர் நாட்டை ஆண்டு மகத்தான வெற்றிகளைப் பெற்றவர். இரகுநாத சேதுபதியைப் போல கிழவன் சேதுபதியும் மதுரை மன்னருக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்தவர் தான். ருஸ்தம்கான் தலைமையில் வந்த முஸ்லீம் படையெடுப்பின் போது மதுரை மன்னருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். சில காரணங்களை மையமாக வைத்து மதுரை மன்னருக்கும் கிழவன் சேதுபதிக்கும் பகை உருவாயிற்று. அது போராகத் தோன்றி இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.

1702ஆம் ஆண்டில் ராணி மங்கம்மாள் மறவர் நாட்டின் மீது படையெடுத்தார். ராணி மங்கம்மாள் அனுப்பிய பெரும் படையுடன் தஞ்சாவூர் படையும் கலந்து சேது நாட்டின் மீது தாக்கிட வந்தது. இந்த கூட்டுப்படையை கிழவன் சேதுபதி மிக துணிச்சல் உடன் எதிர்கொண்டு போரிட்டு விரட்டி அடித்து முகவையை பெரிய அழிவில் இருந்து காப்பாற்றி சேது நாட்டை கிழவன் சேதுபதி முழுமையான சுதந்திரப் பகுதியாக அறிவித்தார். 1709ஆம் ஆண்டில் படையெடுத்து வந்து தஞ்சை நாட்டின் படைகளை வென்று அறந்தாங்கி கோட்டையையும் கைப்பற்றினார் கிழவன் சேதுபதி. மறவர் நாட்டில் புகழை தமிழகம் முழுவதுமாகப் பரப்பிய கிழவன் சேதுபதி 1710ஆம் ஆண்டில் காலமானார். கிழவன் சேதுபதி தன் மறைவிற்கு முன்னதாக தன் காதலியின் மகன் பவானி சங்கரத்தேவனுக்கு முடிசூட்ட நினைத்தார். ஆனால் மக்களின் விருப்பம் வேறு விதமாக இருந்ததால் விஜய ரகுநாதனுக்கு அரசுரிமையை கொடுக்க ஒப்புக்கொண்டார். விஜய இரகுநாத சேதுபதியின் ஆட்சி 1711ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது.

உடனே பவானி சங்கரத் தேவரின் தொல்லையும் தொடர்ந்து தொடங்கியது. பவானி சங்கரத் தேவன் தனக்குத் துணையாக புதுக்கோட்டை மன்னன், தஞ்சை மன்னன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு விஜய இரகுநாத சேதுபதியை அறந்தாங்கிக் கோட்டையில் வைத்து சண்டையில் சந்தித்தார். நோயின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்து விஜய இரகுநாத சேதுபதி தனது சாவை எண்ணி கிழவன் சேதுபதியின் பேரனான தண்டத் தேவன் என்ற சுந்தரேச இரகுநாத சேதுபதியை மறவர் சீமையின் அரசரராக நியமித்தார். இந்த காலக்கட்டத்தில் விஜய இரகுநாத சேதுபதி 1720ஆம் ஆண்டில் மரணமடைந்தார். மறவர் சீமை மக்களிடம் தனது நிலையை உயர்த்திக் காட்டி பவானி சங்கரன் மறவர் சீமையின் ஆட்சியைக் கைப்பற்றினார். பதவியில் இருந்து துரத்தப்பட்ட தண்டத் தேவன் தனது ஆட்சி உரிமையை மறுபடியும் நிலைநாட்டிக் கொள்வதற்காகப் போராட்டத்தில் இறக்கினார். தண்டத்தேவன் தனக்குத் துணையாக மதுரை மன்னன், புதுக்கோட்டை மன்னன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு மறவர் சீமையின் சேதுபதியாக அறந்தாங்கிக் கோட்டையில் வீற்றிருந்து ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பவானி சங்கரத்தேவனைத் தாக்கி அறந்தாங்கிக் கோட்டையைக் கைப்பற்றினார். மறவர் சீமையின் அரசனாகப் பதவியேற்றார் தண்டத்தேவன். இந்நிலையில் பவானி சங்கரத் தேவன் நாட்டைவிட்டு ஓடி தனது சொந்தமான தஞ்சை மன்னரிடம் சரணடைந்தார். மன்னர் பிரானே எனக்கு உதவி செய்து மறவர் நாட்டை எனக்கு மீண்டும் கிடைக்கும்படி நீங்கள் செய்துவிட்டால் பாம்பாற்றிற்கு வடக்கே உள்ள பகுதிகளை எல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன் என்றார் பவானி சங்கரன்.

பவானி சங்கரனுக்கு ஆதரவாகத் தஞ்சையின் படைகள். தண்டத்தேவனுக்கு ஆதரவாக மதுரையின் படைகளும், புதுக்கோட்டை படைகளும் களத்தில் சந்தித்தன. தஞ்சை படைத் தளபதி புதுக்கோட்டைத் தொண்டைமானின் இரண்டு மக்களையும் கைது செய்தார். தஞ்சை தளபதியுடன் உடன்பாடு செய்து கொண்டு சண்டையிலிருந்து விலகினார் புதுக்கோட்டை மன்னர். இறுதியில் தஞ்சைப் படை தண்டத்தேவனின் படையையும், மதுரைப் படையையும் எளிதாகத் தோற்கடித்தது. தண்டத்தேவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். பவானி சங்கரத்தேவன் மீண்டும் மறவர் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது மறவர் நாட்டைச் சேர்ந்த பகுதிக்கும் தலைவராக இருந்தார். இந்தச் சமயத்தில் தான் சிவகங்கைக்கு அருகாமையில் உள்ள நாலுகோட்டை பாளையத்தில் சொந்தக்காரர் சசிவர்ணத்தேவர் மிகச் சிறந்த வீரர் என்ற பெயர் பெற்றிருந்தார். இவர் மறவர் நாட்டின் மன்னராக பவானி சங்கரத்தேவர் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததினால் இவரது செல்வாக்கு, செல்வம், வீரம் இவைகள் மீது பொறாமை கொண்ட பவானி சங்கரத்தேவன் சசிவர்ணத் தேவரின் உடைமைகளைப் பறித்து மறவர் சீமையை விட்டுவிரட்டினார்.

சசிவர்ணத் தேவர் தஞ்சை அரண்மனைக்குச் சென்றார். தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் அரசப் பிரதானிகளின் முன்பாக தனது வீரதீரங்களைக் காட்டினார். பல வீரர்களை வெற்றி கொண்டார். சசிவர்ணத்தேவர் புலியோடு சண்டையிடுவதைப் பார்த்த தஞ்சை மன்னரின் நெருங்கிய உறவினர்கள்கூடப் பயத்தில் அலறினார்கள். தஞ்சை மன்னரின் நெருக்கம் சசிவர்ணத்தேவருக்கு வீரத்தின் பரிசாக கிடைத்தது. ஒரு சமயம் தஞ்சாவூர் மன்னரைக் கொல்ல அவரது எதிரிகள் திட்டம் போட்டனர். மன்னரை எப்படிக் கொல்வது என்று பலவாறு ஆலோசித்து மன்னரின் எதிரிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.

மூர்க்கமான காளை ஒன்றினை ஆரம்ப காலம் தொட்டே மன்னரின் உடையில் வீசும் வியர்வை வாடையைப் பிடிக்கச் செய்து வெறி கொள்ள வைத்து வளர்த்தனர். சமயம் பார்த்து மன்னர் மீது அந்தக் கொலை வெறிக் காளையை ஏவிவிட்டனர். சசிவர்ணத் தேவருக்கு அவர்களின் துர்குணம் எப்படியோ தெரிந்தது. காளையின் முன்னே பாய்ந்து அதன் வலிமை மிக்க கொம்புகளை உடைத்து அந்த முரட்டு காளையை அடக்கி மன்னனின் உயிரைக் காப்பாற்றினார். இந்த நிகழ்ச்சியால் தஞ்சை மன்னர் மனதில் சசிவர்ணர் நீங்கா இடம் பெற்றார்.
தஞ்சையில் ஏற்கனவே மறவர் சீமையைச் சேர்ந்த ஒருவர் அடைக்கலமாகி இருப்பதால் அவர் விஜய இரகுநாத சேதுபதியின் நெருங்கிய உறவினர் தட்டையத் தேவர் ஆவார். தட்டையத்தேவரும், சசிவர்ணத்தேவரும் பவானி சங்கரத்தேவரால் பல துன்பத்திற்கு ஆளானவர்கள். இவர்களின் பொது எதிரியாக பவானி சங்கரத் தேவர் கருதப்பட்டார். தஞ்சை மன்னருக்கு பவானி சங்கரத் தேவ சேதுபதி மீது ஏராளமான கோபம் இருந்தது. 'பாம்பாற்றில் வடக்கே உள்ள பகுதிகளைத் தருகின்றேன் என்று வாக்குறுதியை கைப்பற்றினார். மறவர் சீமையின் அரசனாகப் பதவியேற்றார் தண்டத்தேவன்.