மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 2

chinna maruthu and periya maruthu at kalaiyarkoil temple

பாம்புகளும், துஷ்ட மிருகங்களும் தாக்கி வழிப் பயணிகளுகக்குத் துன்பம் தந்ததைவிட பல மடங்கு துயரத்தைக் கள்வர்கள் கொடுத்தார்கள். மறவர் நாட்டில், இந்தியாவின் தென்முனைக் கிழக்காக அமையப் பெற்றிருந்த இராமேஸ்வரம் பாரத தேசம் முழுவதும் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கியது. அத்தோடு தனுஷ்கோடி என்ற உலகப்புகழ் வாய்ந்த புண்ணியத் தீர்த்தமும் இங்குதான் அமைந்துள்ளது. பாரத தேசத்தில் காசியில் இருந்தும் பக்தர்கள் தங்களின் பாவங்களைத் தொலைக்கக் காடுகளையும், கள்வர்களையும் கடந்து உயிரை வெறுத்து புண்ணியத்திற்காக இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி காலத் தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இந்த நிலையில் மதுரையை மாட்சிமை பொருந்தி ஆண்ட முத்து கிருஷ்ணப்பருக்குக் குருவானவர் ஒருவர் இராமேஸ்வரம் சென்று இராமனாத சுவாமிகளைத் தரிசித்துவிட்டுத் தனுஷ்கோடியில் தீர்த்தமாடப் பெரிதும் விரும்பினார். ஏன் இப்படி குருஜிக்காக முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் பதறுகின்றார்? அதற்குரிய காரணம் இருந்தது. அரசருக்கு மத விஷயத்தில் மட்டும் குருவாக குருஜி விளங்கவில்லை. அரசியல் ஆட்சி விவகாரத்திலும் தன்னிகரற்ற தகுந்த ஆலோசனைகளை குருஜி மதி யூகத்தோடு காத்து கொண்டிருந்தார். அரசருக்கு 'தளபதி எங்கே - உடனே வரச் சொல்” மன்னர் வீரன் ஒருவனுக்கு கட்டளையிட்டார். தளபதி வந்து பணிந்து நின்றார். 'தளபதி” அவர்களே! நமது குருஜி இராமேஸ்வரம் தீர்த்தயாத்திரை செல்ல ஆசைப்படுகிறார். அதற்குப் பொருத்தமான படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து என் முன்னால் கொண்டு வாருங்கள். அத்தோடு மறவர் நாட்டில் இருந்து ஒரு மாவீரனையும் குருஜிக்கு துணையாக அனுப்பினால் நல்லது அல்லவா? 'ஆமாம் அரசே! மறவர் நாட்டிலிருந்தே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால் நல்லது அரசே!” ஒரு வாரம் கழிந்தது. போகலூர் என்ற ஊரின் தலைவராக இருந்த சடையக்கத் தேவர் எனப்படும் மாவீரர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் முன்னால் பெருமையோடு கொண்டுவரப் பெற்றார்.

மன்னர் சடையக்கத் தேவரைப் பார்த்தவுடன் அவரது உருவம், பேச்சில் வீசிய அறிவொளி முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைப் பெரிதும் கவர்ந்து தன் வயப்படுத்தியது. சடையக்கத் தேவரும் மன்னருக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டார். உன்னை நம்பி என் குருநாதரை உங்களுடன் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றார். உங்கள் ஆணை மன்னவா! என்றார் பதில் முழக்கமாக சடையக்கத் தேவர். மறவர் நாட்டில் காடுகளைக் களைந்து கள்வர்களை ஓட.. ஓட விரட்டி குருஜியை இராமேஸ்வரம் - தனுஷ்கோடி தீர்த்த யாத்திரைக்கு சடையக்கத் தேவர் அழைத்துச் சென்றார். குருஜியின் மனம் முழுவதிலும் இடம் பிடித்தார் சடையக்கத் தேவர். குருஜி மதுரைக்குத் திரும்பியதும் தன் மன்னனும் மாணவனுமான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைச் சந்தித்தார். மன்னவா... என் மனம் குளிர்ந்தது! உன் நண்பன் சடையக்கத்தேவன் மூலம் இறைவனின் பரிபூரணமான அருளை நான் பெற்றேன். உன் ஆட்சி நிலைக்க நீ நீடித்த ஆயுளைப் பெற அந்த இராமநாதஸ்வாமி உனக்கு அருள்பாலிப்பார்” என்று மனம் மகிழ்ந்து ஆசீர்வதித்தார் குருஜி. சடையக்கத் தேவருக்கு ஏதாவது செய்தே தீருவது என்ற உறுதிப்பாட்டுடன் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கச் சென்றார். மறுநாள் அரசரின் ஆலோசனைக் குழு மறவர் நாடு பற்றியும், சடையக்கத் தேவரைப் பற்றியும் நிறைய ஆலோசனை செய்தது. சடையக்கத் தேவரிடம் சீர்கெட்டுக் கிடக்கும் மறவர் திருநாட்டை முறைப்படுத்திட ஒரு காவலன் தேவை, அதற்கு சரியான ஆள் இந்த சடையக்கத் தேவர் தான் என முடிவு செய்யப்பட்டது.

மன்னர் சொல்லைக் கேட்டு மகிழ்ந்த சடையக்கத் தேவர் தனது வீரத்திற்குக் கிடைத்த பரிசை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். புதிதாக ஒரு மறவர் நாட்டைச் சடையக்கத் தேவர் மூலமாக உருவாக்கிய பெருமை முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரையே சேரும். கி.பி. 1605ஆம் ஆண்டு முதல் சேதுபதியாக பதவி ஏற்ற சடையக்கத் தேவர் மிகச் சிறந்த முறையில் ஆட்சிப் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு திருமலை நாயக்கர் என்ற புகழ்பெற்ற நாயக்க மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த நாயக்க மன்னர் மட்டுமல்ல, சிறந்த ராஜ தந்திரம் உடையர். சடையக்கத் தேவர் கி.பி. 1621ஆம் ஆண்டில் மறைந்தார்.

கி.பி. 1621ஆம் ஆண்டு முதல் 1635ஆம் ஆண்டு வரை கூத்தன் சேதுபதி மறவர் நாட்டை மிகச் சிறந்த முறையில் ஆண்டார். கூத்தன் சேதுபதிக்கு குழந்தை இல்லை. அவரது மறைவுக்குப் பிறகு இரண்டாம் சடையக்கத் தேவர் என்று பெயர் பெற்றிருந்த தளவாய் சேதுபதி மறவர் நாட்டின் சேதுபதியாகப் பதவி ஏற்றார். தளவாய் சேதுபதி அவர்கள் திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு மறவர் சீமையில் பெரும் உள்நாட்டுப் போரை உருவாக்கிப் பங்காளிகளைப் பகையாளிகளாக மாற்றி வெறி கொள்ள வைத்தது. அந்த அறிவிப்பு 'எனக்குப் பின் மறவர் நாட்டை ஆளும் உரிமை என் தமக்கையின் மகன் இரகுநாத தேவருக்குத்தான்” என்பது. இந்த அரசுரிமை பற்றிய அறிவிப்பால் மிகுந்த கோபம் கொண்டவர் கொதித்தெழுந்தவர் தம்பித் தேவராவார். தம்பித்தேவர் யார்? இவர் சடையக்கத் தேவரின் காதல் மனைவிக்குப் பிறந்தவராவார். மேலும் இவர் காளையார்

கோவிலை ஆண்டு வந்தவர். தம்பித்தேவர் தொடர்ந்து தளவாய் சேதுபதிக்குத் தொல்லை கொடுத்து வந்தார். உள்நாடடில் இரத்த ஆறு ஓடியது. தம்பித்தேவரைத் திருமலை நாயக்கர் ஆதரிக்கின்றார் என்ற செய்தி வதந்தியாக மறவர் நாடு முழுவதும் பேச வைக்கப்பட்டது. திருமலை நாயக்க மன்னர் மேற்கொண்ட இராஜ தந்திரத்தால் மறவர் நாட்டை தளவாய் சேதுபதி பலமிழந்தார். திருமலை நாயக்கரின் மனோநிலையை உணர்ந்து கொண்ட தம்பித்தேவர் மதுரைக்குச் சென்று அவரிடம் சரணம் என்று சேர்ந்தார். திருமலை நாயக்கரும் தளவாய் சேதுபதியை கலகக்கார் என்று அறிவித்தார். தம்பித் தேவர்தான் மறவர் நாட்டின் மன்னர் என்றும் அறிவித்தார். தம்பித் தேவருக்குத் தேவையான பணத்தையும் படையையும் வேண்டிய அளவிற்கு விரும்பிக் கொடுத்தார் திருமலை நாயக்க மன்னர்.

தம்பித் தேவரும் படைகளுடன் மறவர் நாட்டுக்கு வந்து தளவாய்ச் சேதுபதியோடு மோதினார். தளவாய் சேதுபதி இராமேஸ்வரத் தீவுக்குள் அகழிபோலப் பயன்படுத்திப் பாதுகாப்பாக இருந்தார். இறுதியில் திருமலை நாயக்கர் படையுடன் இராமப்பையர் மற்றும் அவரின் மருமகன் உதவியுடன் தளபதி சேதுபதியையும், தணக்கத் தேவரையும் கைது செய்து மதுரைக்கு கொண்டு வந்தார். மறவர் சீமையில் சேதுபதியாக ஆன தம்பித்தேவர் அமைதியான மனநிலையில் ஆட்சியைத் தொடர முடியாது பெரிதும் தொல்லைப்படுத்தப்பட்டார். தம்பித் தேவருக்குத் தாளாத தொல்லை தந்தவர்கள் இரகுநாதத் தேவர், நாராயணத் தேவர் ஆகியோர் ஆவார்கள். மேற்குறிப்பிட்ட இரண்டு பேரின் ஓயாத உரசல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பித் தேவர் மறுபடியும் திருமலை நாயக்க மன்னரின் உதவியை நாடினார். ஆனால் இப்போது திருமலை நாயக்க மன்னரின் மனம் முழுவதுமாகத் தம்பி தேவருக்கு எதிராக நின்றது.