மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 13

Maruthu Pandiyar Kalayarkoil Temple ஆங்கிலேயருக்கும் கம்பெனியாருக்கும் வரி கொடுக்க மறுத்த பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் மீது படையெடுத்தார்கள். 5-9-1799ஆம் நாளில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. தப்பி ஓடிய கட்டபொம்மன் புதுக்கோட்டைக் காடுகளில் புதுக்கோட்டை மன்னரால் நயவஞ்சகமாக பிடிபட்டார். 16-10-1799ஆம் நாளில் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

ஊமைத்துரை ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் அதாவது 2-2-1801ஆம் தேதி பாளைங்கோட்டை சிறையை உடைத்துக் கொண்டு தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார். (இச்செயலுக்கு சின்னப் பாண்டியர் படை உதவி செய்ததாககச் சொல்கிறார்கள்) அதன் பின்பு ஊமைத்துரை நேரடியாக சிவகங்கைக்குள் 22-5-1801ல் அடைக்கலம் புகுந்தார். சின்னப்பாண்டியர் மேளதாளங்களுடன் தீவட்டி, தீபஜோதி ஆராதனைகளுடன் வரவேற்று மரியாதை செய்து சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியைத்தான் சிவகங்கைச் சீமையின் கிராமப் பகுதிகளில் 'சிவகங்கைக்கு வினை கொட்டு மேளத்துடன் வந்தது” என்று ஊமைத்துரை சிவகங்கைக்கு வந்தது முதல் வினைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகச் சின்னமருது மேல் எஸ்.ஆர். லூஷிங்டன் என்ற கலெக்டர் ஆத்திரமும் கோபமும் கொண்டார். கர்னல் அக்னியூ ஒரு தந்திரமான அறிக்கையை 12-6-1801ஆம் தேதி பிரகடனப்படுத்தினார். அதில் 'சின்ன மருதுவுடனோ அல்லது அவர் தம் கூட்டாளிகளுடனோ எவரேனும் தொடர்பு வைத்துக் கொண்டாலோ கம்பெனியின் முகாம்களைத் தகர்த்தாலோ அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள். கம்பெனியின் அனுமதியில்லாமல் யாரும் துப்பாக்கி வெடிமருந்து முதலியவற்றைப் பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ எடுத்துச் செல்லக்கூடாது. சிவகங்கையின் அரசுரிமைப் பட்டத்திற்குப் போட்டியிடுவோர் எவராயினும், சின்ன மருது மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்களது கோரிக்கை தடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.”

இந்த அறிக்கைக்குப் பதிலாகத் தான் சின்னப் பாண்டியரின் 'ஜம்பூ தீவப் பிரகடனம்”த்தை திருச்சியில் நவாப் முகமது அலியின் திருச்சிக் கோட்டையில் நவாப்பின் மாளிகைக்குச் செல்லும் மிகப்பெரிய வாயிற்கதவிலும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலின் சுவரிலும் தென்னிந்திய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்காக ஒரு பிரகடனத்தை தீட்டினார். இந்தப் பிரகடனம் தான் முழு இந்தியாவிற்கே முதல் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து எடுக்கப்பட்ட விடுதலைப் பிரகடனமாகும். இதற்கு முன்பு பல ஆங்கிலேயரை எதிர்த்தாலும் கூட்டு முயற்சியில் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியது இதில்தானாம்!

சின்ன மருதுவின் 'ஜம்பூ திவப் பிரகடனம்”
தேசிய முக்கியத்தும் வாய்ந்த அந்த பிரகடனம் உயர்ந்த இலட்சியங்களை உள்ளடக்கியது.
ஆங்கிலக் கம்பெனியாருக்கு 16-6-1801ஆம் தேதி கிடைக்கப்பெற்றது
1. இதை யார் பார்த்தாலும் கவனமுடன் படிக்கவும்.
2. ஜம்பு (நாவல்) தீவிலும் ஜம்பு தீபகற்பத்திலும் வாழுகிற சகல சாதியினருக்கும், நாடுகளுக்கும், பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும், முசல்மான்களுக்கும் இந்த அறிவிப்புத் தரப்படுகிறது.
3. மேன்மை தங்கிய நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விதவை போலாகிவிட்டார். ஐரோப்பியர்கள் அவர்களது நம்பிக்கைகளுக்கு

Maruthu Pandiyar Kalayarkoil Temple மாறாக அவற்றை புறக்கணித்து, இந்த நாட்டை ஏமாற்றித் தமதாக்கிக் கொண்டதுடன், மக்களை நாய்களாகக் கருதி அதிகாரம் செலுத்துகின்றனர். மக்களிடையே ஒற்றுமை இல்லை. நட்பு இல்லை. ஐரோப்பியரின் போலி வேடத்தை அறியாமல் முன்யோசனையின்றி உங்கள் அரசை அவர்களின் காலடியில் வைத்தீர்கள். இந்த இழிபிறவிகளால் ஆளப்படும் இந்நாடுகளின் மக்கள் ஏழைகளானார்கள். அவர்களின் உணவு வெ ள்ளம் (நீர் ஆதாரம்) தான் என்றாயிற்று. அவர்கள் இவ்வாறு இன்னலுறுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவு இல்லாதவர்களாயுள்ளனர். இப்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதிலும் இதைப் போக்க சாவது எவ்வளவோ மேலானது என்பது உறுதி, அப்படிச் சாவைத் தழுவுகிறவனின் புகழ் சூரிய சந்திரர் உள்ளவும் வாழும். மேன்மை தங்கிய நவாபிற்கு ஆற்காட்டு சுபாவும் மற்றும் விசயமணத் திருமலை நாயக்கருக்கு கர்நாடகமும் தஞ்சாவூரும் முதல் கட்டமாகவும், மற்றவர்களுக்கு மற்ற சீமைகள் அடுத்த கட்டமாகவும், அந்தந்த நாட்டு வளமைகளையும் நெறிகளையும் மீறாமல் திரும்ப அளிக்கப்படும். இனி வருங்காலத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரைப் பாத்தியதையே அடையலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பியர் தம் பிழைப்புக்கு மட்டும் நவாப்பின் கீழ் பணிபுரிந்து, இடையீடற்ற உண்மையான மகிழ்ச்சி கொள்ளலாம். ஐரோப்பியர் ஆதிக்கம் ஒழிந்துவிடுமாதலால் இனி (ஐரோப்பியர்) தலையீடற்ற நவாபின் ஆட்சியில் கண்ணீர் சிந்தாத இன்ப வாழ்வு வாழலாம்.

4. அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளின் பெயர்கூட இல்லாதவாறு ஒழிக்க வேண்டி, அங்கங்கு பாளையங்களிலும், ஊர்களிலும் உள்ள ஒவ்வொருவரும் உங்களுக்குள் ஒன்றுபட்டு, ஆயுதமேந்திப் புறப்படுமாறு வேண்டப்படுகிறது. அப்போதுதான் ஏழைகளும், இல்லாதோரும் விமோசனம் பெறுவார்கள். எச்சில் வாழ்க்கையை விரும்பும் நாய்களைப் போல ஈனப் பிறவிகளின் வார்த்தைகளுக்கு அடிபணிகிற எவரேனும் இருப்பின் அவர்கள் கருவறுக்கப்பட வேண்டும்.

இந்த இழிபிறவிகள் (ஐரோப்பியர்) எவ்வளவு ஒன்றுபட்டும் தந்திர தன்மை கொண்டும் இந்த நாட்டை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வயல்களிலோ அல்லது வேறு துறைகளிலோ அரசின் பொது (சிவில்) அலுவலகங்களிலோ, இராணுவத்திலோ எங்கும் வேலை பார்ப்பவராயினும், பிராமணர்கள், சத்திரியோரில் மீசையுள்ள எவரும் இந்த இழி பிறவிகளின் இராணுவச் சிப்பாய்கள் எவராயிருப்பினும் ஆயுதம் ஏந்தத் தெரிந்த எவரும் தங்கள் துணிச்சலைக் காட்ட, இதோ உங்களுக்கு முதல் வாய்ப்பு வந்துவிட்டது. அந்த வாய்ப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று கீழே விவரிக்கப்படுகிறது.

5. எங்கெல்லாம் அந்த இழி பிறவிகளைப் பார்க்க நேர்கிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். வேருடன் களைப்படும் வரை அவ்வாறு செயல்படுங்கள். இந்த இழி பிறவிகளிடம் பணிபுரிவோர் எவரும் (அவர்கள் மட்டும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டு) சொர்க்கத்தை அடைந்துவிடப் போவதில்லை என்பதை நானறிவேன். இதனைக் கருத்தூன்றுங்கள் நிதானமாய் யோசியுங்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதவனின் மீசை, என் மறைவிடத்து மயிருக்குச் சமம்! அவன் உண்ணும் உணவு சத்தொழிந்து சுணுயற்றுப் போகட்டும். அவனது மனைவியும் குழந்தைகளும் இன்னொருத்தானுக்காகட்டும். அணு அவ்வழி பிறவிகளுக்குப் பிறந்தவைகளாக்க கருதப்படட்டும். எனவே ஐரோப்பியரால் இன்னும் இரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர்! இதைப் படிக்க சேர்கிற, இதன் சாராம்சத்தைக் கேட்க நேர்கிற எவரும் இதனை நண்பர்களுக்கு எழுதி எவ்வளவு பகிரங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு பகிரங்கப்படுத்தி எழுதி ஒட்டச் செய்வீர். அதைப் பெறுகிற நண்பர்களும் அதே மாதிரி (அதைப் படியெடுத்து) வெளியிடச் செய்து பிரச்சாரம் செய்திடச் செய்வீர்! மேலே சொன்னபடி எழுதவும். எழுதியதைச் சுற்றுக்கு விடவும் மறுக்கிறவர்கள கங்கை கரையில் காராம் பசுவைக் கொல்கிற பாவத்திற்கும், நரகத்திற்குப் போகிற, வேறு பாபங்களுக்கும

Maruthu Pandiyar Kalayarkoil Temple ஆன குற்றங்களைச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். இதை அனுசரிக்காத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
இங்ஙனம்,
பேரரசர்களின் ஊழியன்
ஐரோப்பிய இழி பிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத
- மருது பாண்டியன் -

பெறுவோர்
சீரங்கத்தில் வாழும் அர்ச்சகர்கள், ஆன்றோர், அனைத்து பொது மக்கள் அனைவருக்கும் மருதுபாண்டியன் மேலே கண்டவர்களின் பாதங்களில் வீழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அரண்களையும், மண்கோட்டைகளையும், ஆலயங்களையும், தொழுகையிடங்களையும் கட்டியவர்கள் நம் மன்னர்களாயிருக்க, அந்த மன்னர்களும், மக்களும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே இந்த இழி நிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள் இந்தப் பணி வென்றிட உங்கள் நல்லாதரவை நல்குங்கள்! மேற்கண்டவை திருவரங்கம் அரங்கநாதர் கோயிலின் மதியில் ஒட்டப்பட்ட பிரகனத்தில் கண்ட வாசகங்களின் நகலாகும். ஆதாரம் -
மருது பாண்டிய மன்னர்கள் மீ. மனோகரன் - சிவகங்கை. விடுதலைப் புரட்சியின் போர் தொடங்கிவிட்டது

பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டை நொறுக்கப்பட்டு ஊமைத்துரை சிவகங்கைச் சீமைக்குள் அடைக்கலம் புகுந்து அடுத்த ஐந்தாம் நாளே 28-5-1801இல் மேஜர் ஷெப்பர்டு தலைமையில் ஆங்கிலேயரின் படை நாகலாபுரத்திற்கு வந்து சேர்ந்தது. இவர்களோடு மேஜர் கிரே தலைமையில் ஓர் ஆங்கிலயப் படையும் நாகலாபுரம் வந்து சோந்தது.
29-5-1801ஆம் நாளில் மருதுபாண்டியர்களின் படை இராமநாதபுரம் நாட்டிற்குச் சொந்தமான கமுதி கோட்டையை மயிலப்பன் சேர்வை படைகளுடன் சேர்ந்து கைப்பற்றியது விபரம் அறிந்த ஆங்கிலேயர்களின் படை கமுதிக் கோட்டையை நோக்கி நாகலாபுரமும் விரைந்தது. பலத்தையெல்லாம் பயன்படுத்தியும் மருதுபாண்டியர்களின் படை தோல்வியைத் தழுவியது. கோட்டைக்குப் படைகளை மட்டும் வைத்துவிட்டு ஆங்கிலேயர்களின் படை திருப்புவனத்தை நோக்கி திரும்பியது. திருப்புவனத்தில் வைத்து மருதுபாண்டியர்களின் படையும் ஆங்கிலேயர்களின் படையும் படுபயங்கரமாக மோதிக் கொண்டன. திருப்புவனத்தில் ஆங்கிலப் படைகள் படுதோல்வி அடைந்து பின் வாங்கின.

1801ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களின் படை திருப்பவுனத்தை விட்டுத் திருப்பாச்சேத்திக்குக் கடக்கப்படாது. மருதுபாண்டியர்களின் வீரர்கள் பெரும்வீரத்தோடு வெ ள்ளையர்களை எதிர்ப்பட்ட வழியெல்லாம் தாக்கி அழித்தனர். அந்த நாளின் இரவில் திருப்பாச்சேத்தி கண்மாய்க்கரை உச்சியில் மருதுபடைகள் தீவட்டியை வைத்துக் கொண்டு பல பேர் போருக்கு நிற்பதைப் போன்ற எண்ணத்தை உண்டாக்கி ஆங்கிலேயர்களுக்கு கலக்கத்தை உண்டு பண்ணினார்களாம். அப்போரில் மேஜர் கிரே தன் உயிரை இழந்தார். மருது பாண்டியர்களின் வீரர்கள் எழுபது பேர் கொல்லப்பட்டனர்.

கடும் போர் புரிந்த மருது சகோதரர்களின் படை வீரர்கள் ஆங்கிலேயப் படை வீரர்களைப் புறமுதுகுகாட்டி ஓடச் செய்தனர். லெப்டினட் பார்மின்டனும், லெப்டினட் ஸ்டூவர்ட்டும் படுகாயப்பட்டனர். வழியில் துணைக்கு வந்த படைகளையும் மருதுபாண்டியர்களின் எழுநூறு விடுதலை வீரர்கள் எதிர்த்து அழித்தார்கள்.